Published : 01 Jul 2022 06:38 AM
Last Updated : 01 Jul 2022 06:38 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர். படம்: ம.பிரபு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் உட்பட 10 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக ஆட்சியில் இருந்த குறைபாடுகள் தற்போதும் நீடிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

போக்குவரத்து கழகங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள 325 பணிமனைகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள பணிமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களில் நிதி பிரச்சினையை காரணம் காட்டி, தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட வேண்டிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் உருவாக்கப்படவில்லை.

இது மட்டுமின்றி, தொழிலாளர் பணம் ரூ.12 ஆயிரம் கோடியை நிர்வாகம் செலவு செய்துவிட்டது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.

அகவிலைப்படி உயர்வு 7 ஆண்டுகளாக மறுக்கப்படுகிறது. இவ்வாறு அதிமுக ஆட்சியில் இருந்த அதே அவலங்கள் தற்போதும் நீடிக்கின்றன.

குறிப்பாக, போக்குவரத்து கழகங்களின் திறனை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளே இப்போதும் தொடர்கின்றன. தனியார் பேருந்துகள் இயக்கம், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமனம் என தவறான விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை சுட்டிக்காட்டியும், எவ்வித மாற்றமும் செய்ய அரசு முன்வரவில்லை.

எனவே, தனியார்மய நடவடிக்கைகளை கைவிட்டு, பொது போக்குவரத்தை பலப்படுத்தி, போக்குவரத்துகழகங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து இறுதிசெய்ய வேண்டும், பேட்டா, இன்சென்டிவ் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x