Published : 28 Jun 2022 05:09 AM
Last Updated : 28 Jun 2022 05:09 AM

சாதாரண கட்டண அரசு பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இருமடங்கு பேட்டா - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண சேவை திட்டத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு அமல்படுத்தியது. பின்னர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் சாதாரண கட்டண பேருந்துகளில் வசூல் குறைந்து, அதன் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்படும் வசூல்படியும் குறைந்தது.

இதுகுறித்து, ‘கட்டணமில்லா பயண சேவை பேருந்துகள். வசூல் சரிந்ததால் பேட்டா குறைந்தது - வருத்தத்தில் ஊழியர்கள்’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த ஜூன் 26-ம் தேதி செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், சாதாரண கட்டண பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படியை இரட்டிப்பாக வழங்க அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த 4-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே 12-ம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், துறை செயலர் கே.கோபால் முன்னிலையில் நடந்தது. இதில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிர் கட்டணமின்றி பயணிக்கும் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு பேட்டா நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில்,சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட தமிழக அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x