Published : 26 Jun 2022 09:15 AM
Last Updated : 26 Jun 2022 09:15 AM

கட்டணமில்லா பயண சேவை பேருந்துகள் | வசூல் சரிந்ததால் பேட்டா குறைந்தது - வருத்தத்தில் ஊழியர்கள்

கட்டணமில்லா பயண சேவை வழங்கும் பேருந்துகளின் வசூல்குறைந்ததால் நடத்துநர், ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் பேட்டாவும் குறைந்துள்ளது. இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 19,290 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கும் திட்டத்தை திமுக அரசு, கடந்த ஆண்டு மே மாதம் அமல்படுத்தியது. இதையடுத்து, இத்திட்டம் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதில் பலன் பெறுவோரின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையிலும், அதற்கான தொகையை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கும் வகையிலும் கட்டணமில்லா பயணச்சீட்டும் வழங்கப்பட்டது.

அதன்படி, 7,321 சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 36 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். கடந்த16-ம் தேதி வரையில், 126.10 கோடி முறை பெண்கள் கட்டணமின்றி பயணித்திருந்தனர்.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதால் சாதாரண கட்டண பேருந்துகளில் வசூல் குறைகிறது. இதனால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்கப்படும் பேட்டாவும் குறைகிறது என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நடத்துநர்கள் விளக்கம்

இதுகுறித்து நடத்துநர்கள் சிலர் கூறுகையில், "தற்போது சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் 62 சதவீதம் பெண்கள் பயணிக்கின்றனர். சராசரியாக ரூ.10 ஆயிரம்வசூல் செய்யும் ஒரு பேருந்தில், தற்போது ரூ.4 ஆயிரம் மட்டுமே வசூல் செய்ய முடியும். ஒரு பேருந்தில் 84 பேர் மட்டுமே ஏற்றிச் செல்லலாம்.

இதேபோல் முதியவர்களுக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகை அறிவிப்பால் வசூல் குறைவதால் எங்களுக்கு, நாள் ஒன்றுக்கு 2 தேநீர் வாங்கக் கூடிய தொகையை விட சொற்பமான தொகையே பேட்டாவாக கிடைக்கிறது" என்றனர்.

தொழிற்சங்கம் கருத்து

இப்பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது:

போக்குவரத்துக் கழகங்கள் தொடங்கப்பட்டபோது ரூ.6 கோடி செலவிடப்பட்டது. அதற்குப் பிறகு மூலதன உதவியாக அரசு சார்பில் சிறிய அளவிலான நிதியுதவி கூட வழங்கப்படவில்லை. போக்குவரத்துக் கழகங்கள் பெற்ற கடனுக்குஅரசு உத்தரவாதம் அளித்துள்ளதால், கட்டணமில்லா பேருந்து சேவையை ஈடு செய்வதற்கு வழங்கப்படும் தொகையானது, போக்குவரத்துக் கழகங்கள் பெற்ற கடனுக்கே செலுத்தப்படுகிறது.

சாதாரண கட்டண நகரப் பேருந்தை பொறுத்தவரை ஓட்டுநர்,நடத்துநருக்கு சேர்த்து ரூ.100-க்கு ரூ.1.65 பேட்டா வழங்கப்பட்டது.

இதை மாற்றியமைக்கும்போது ரூ.1.52 பேட்டாவாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பேட்டா குறைக்கப்பட்டாலும் மறுபுறம் வசூல் அதிகரிப்பதால், பேட்டா தொகையில் குறைவு இருக்காது. இதனால் இந்த பேட்டா நிர்ணயத்துக்கு தொழிற்சங்கத் தரப்பில் எதிர்ப்பு எழவில்லை. ஆனால்தொழிற்சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் நிர்வாகம் தன்னிச்சையாக ரூ.1.33 பேட்டாவாக அறிவித்தது.

இதனால், ஓட்டுநர் நடத்துநர்களுக்கு பெரியளவு பலனில்லை. வசூல் இல்லையென அவர்களின் பேட்டாவை தான் நிர்வாகம் குறைக்கிறது. எனவே, ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்கெனவே பெற்று வந்த பேட்டா குறைவில்லாமல் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர் அதிகாரி கருத்து

தொழிற்சங்கத்தின் கருத்துகள் குறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளிடம் கேட்டபோது, "14-வது ஊதிய ஒப்பந்தத்தின் கடந்த பேச்சுவார்த்தையில் பேட்டாபிரச்சினை குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்துஆலோசித்து வருகிறோம்.

அரசின் திட்டத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய போக்குவரத்துக் கழகங்களுக்கு நிகழ் நிதியாண்டில் ரூ.5260.78 கோடி வழங்கப்படுகிறது. அதில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண சேவைக்கான தொகை ரூ.1520 கோடியும் அடங்கும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x