

தமிழகத்தில் மா விளைச்சல் குறை வால் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவில் இருந்து மாம் பழங்கள் விற்பனைக்கு வந்துள் ளன. இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழங்களின் அரசன் எனச் சொல்லப்படும் மாம்பழம், 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சர்வ தேச அளவில் இந்தியாவில் 40 சதவீதம் உற்பத்தி ஆகியுள்ளது. சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் மாம்பழங்களை உற்பத்தி செய்தா லும், இந்திய மாம்பழங்களின் நிற மும், சுவையும் நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடக் கூடிய சிறப்பை பெற்றுள்ளதால் உள் நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ கத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், தேனி, திரு வண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில், ஆண் டுக்கு 5.3 லட்சம் டன்கள் மாம்பழங் கள் உற்பத்தி ஆகின்றன. ஆண்டு தோறும், கோடை விடுமுறை நாட் களில் மாம்பழ சீசன் களை கட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த ஆண்டு தற்போது வரை மல்கோவா, பெங்களூரா, அல் போன்சா உள்ளிட்ட முக்கிய மாம் பழங்கள் சந்தைக்கு பெரிய அள வில் வராததால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பங்கனப்பள்ளி, காசாலட்டு, நீலம் மற்றும் சிறிய வகை மாம்பழங்கள் மட்டுமே விற் பனைக்கு வருகின்றன. இந்தப் பழங்கள் அவ்வளவாக சுவையாக இல்லாததால், வியாபாரிகள் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து தற் போது மாம்பழங்களை விற்பனைக் குக் கொண்டு வந்துள்ளதால், தமிழக மா விவசாயிகள் வருமா னம் பெரிதும் பாதிப்படையச் செய் துள்ளது. அதனால், எதிர்காலத்தில் மா உற்பத்தியை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வெப்பத்தால் விளைச்சல் குறைவு
இதுகுறித்து வேளாண் பொறியாளர் ஜான்பிரிட்டோ ராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் மாமரங்கள், செம்மண், செம்மண் சரளையில் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இம் மண்களில் முறையான நுண்ணுயிர் பெருக்கம் மற்றும் உர மேலாண்மை இல்லை. கடந்த ஆண்டு மா சாகுபடி அதிகம் நடக்கும் மாவட்டங்களில் இயல்பைக் காட்டிலும், குறைவான மழையே பெய்தது. அதனால், வளர்ந்த மரங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய 100 லிட்டர் என்ற அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. பூப் பிடிக்கத் தயாராகும்போதும், பூப் பிடித்து பிஞ்சாக மாறும்போதும் 24 முதல் 27 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் இருக்க வேண்டும். காயாக மாறிய பின் அதன் வளர்ச்சிக்கு அதிகப்படியான வெப்பம் பலன் அளிக்கும்.
25 முதல் 250 செ.மீ. வருட மழையும் இதற்கு தேவைப்படுகிறது. கடந்த 2010 முதல் 5 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி, பருவநிலை மாற்றம், 35 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரித்த வெப்பநிலை போன்ற காரணங்களால் பூவின் அளவு குறைந்ததுடன், பிஞ்சுகளும் உரிய சத்து இல்லாமல் உதிர்ந்து விழுந்தன. இதனால், இந்த ஆண்டு 40 சதவீதம் மா விளைச்சல் குறைந்துள்ளது என்றார்.