புதுச்சேரி அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்: 2-வது நாளாக பயணிகள் அவதி

புதுச்சேரி அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்: 2-வது நாளாக பயணிகள் அவதி
Updated on
1 min read

புதுச்சேரி: தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, புதுச்சேரி அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாம் நாளை எட்டியுள்ள நிலையில், போக்குவரத்து வசதியின்றி பொது மக்கள் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக டைமிங் பிரச்சினை காரணமாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக (பிஆர்டிசி) பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை, தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கி வருகின்றனர். இதனிடையே நேற்று புதுச்சேரியில் இருந்து முத்தியால்பேட்டை நோக்கி பிஆர்டிசி மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை சேலியமேடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சிவலிங்கம் ஓட்டினார்.

பேருந்து முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில் சென்றபோது, டைமிங் பிரச்சனை காரணமாக தனியார் பேருந்து ஊழியர்கள், பிஆர்டிசி பேருந்து ஓட்டுநர் சிவலிங்கத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிவலிங்கம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பிஆர்டிசி ஓட்டுநர், நடத்துநர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புதுச்சேரியில் இயக்கப்படும் பிஆர்டிசி பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. பேருந்துகள் அனைத்தும் புதுச்சேரி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல் சென்னை, திருப்பதி, பெங்களூரு, மாஹே உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளுக்கும் பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால், இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் உட்பட பலரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக பிஆர்டிசி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தினர். பணிமனை முன்பு திரண்ட ஊழியர்கள், தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பிஆர்டிசி பேருந்துகள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in