

கிருஷ்ணகிரி: காவேரிபட்டினத்தில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அம்பேத்கர் காலனியில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று (22ம் தேதி) காவேரிப்பட்டினம் - அகரம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது: ''அம்பேத்கர் காலனியில் உள்ள கடை ஒன்றில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் பணிக்குச் செல்லாமல் காலையிலேயே மது குடித்து விட்டு சாலையோரம் விழுந்து கிடக்கின்றனர்.
இதனால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதுடன் அந்த வழியே பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இடையூறு ஏற்படுகிறது. இதுபோல் பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த காவேரிப்பட்டினம் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது உடனடியாக மதுவிற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து உடனடியாக போலீஸார் அங்கு உள்ள கடைகளில் ஆய்வு செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.