ஒரே நாளில் இரு தேர்வுகள்; ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

ஒரே நாளில் இரு தேர்வுகள்; ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தி, “ அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தேர்வுகள் வரும் 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். காவல் உதவி ஆய்வாளர் என்பது அவர்களின் கனவுப் பணி. ஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெறுவதால் எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பத்திற்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர்.

முதுநிலை உடற்கல்வியியல் (M.P.Ed) பயிலும் மாணவர்கள் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடற்தகுதித் திறன் கொண்டவர்கள். அவர்களுக்கும் 25-ஆம் தேதி பருவத் தேர்வுகள் நடத்தப்படுவதால் அவர்களாலும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க முடியாது.

கல்வியின் நோக்கம் கனவுகளை எட்டிப்பிடிக்க உதவுவது தான். ஆனால், அண்ணாமலை பல்கலை.யின் தேர்வு அட்டவணை காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு செல்ல விரும்புவோரின் கனவுகளை சிதைப்பதாக உள்ளது. தேர்வு அட்டவணையை மாற்ற பல்கலை. நிர்வாகம் மறுத்து விட்டது!

பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒரு வாரம் ஒத்திவைப்பதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மாணவர்கள் நலனே பல்கலை.யின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, பட்டமேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும். “ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in