

சென்னை: "ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம், 10 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் அமுதம் பல்பொருள் அங்காடிகளில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர், ஜெ.ராதகிருஷ்ணன் இன்று (ஜூன் 16) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித் அவர், " எனக்கு தமிழக முதல்வரின் எண்ணமும் முழுமையாக தெரியும். விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான சுதந்திரம் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்ய நாங்களே நேரடியாக செல்லப் போகிறோம்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் நெல் கொள்முதல் நடக்கிறது. இனி அடுத்த சீசன் அக்டோபர் மாதம், மற்றும் இடையில் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். விவசாயிகள், அரசு, மக்கள் மூன்று தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக முதல்வர் எப்போதுமே புதிய முயற்சிகள், புதிய உத்திகளுக்கு ஊக்கமளிப்பார்கள். அந்த வகையில், ஏழை எளிய மக்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய ரேசன் கடைகளில் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஒருபுறம். மற்றொருபக்கம் 92 அமுதம் ஸ்டோர்ஸ் அரசால் நடத்தப்படுகிறது. அங்கு சில பொருட்கள் லாபகரமாகவும், சில பொருட்கள் நட்டமாகவும் விற்பனையாகிறது. எனவே அங்கும் தரமான பொருட்களை விற்பனை செய்தால், மக்கள் தனியார் கடைகளுக்குச் செல்லாமல் அரசு நடத்தும் கடைகளுக்கு வருவர். விவசாயிகளைப் பொருத்தவரை தேவைக்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும். தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம், 10 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர்கள் குறைந்தபட்சம் 20 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து எங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னையைப் பொருத்தவரை இணை ஆணையர்கள் 30 கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆந்திரா உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். .