மோடி பிரச்சாரத்தால் மாற்றம் நிகழும்: பாஜக செய்தி தொடர்பாளர் நம்பிக்கை

மோடி பிரச்சாரத்தால் மாற்றம் நிகழும்: பாஜக செய்தி தொடர்பாளர் நம்பிக்கை
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் பிரச்சாரத்துக்கு பிறகு தமிழக தேர்தல் களத்தில் திருப்புமுனை நிகழும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஆர்.சீனிவாசன் தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மதுரையில் பேசவிருக்கும் பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்ட பின் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கும் அமித்ஷா காலை மதுரை வருகிறார். பின்னர் பட்டுக்கோட்டை, தென்காசி, நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார்.

இரவு 7.30 மணிக்கு மதுரை திருப்பாலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிரதமர் மோடி மே 8-ல் ஓசூர் மற்றும் சென்னையிலும், மே 10-ல் கன்னியாகுமரி மற்றும் வேதாரண்யத்திலும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். மோடி, அமித்ஷா பிரச்சாரம் தமிழக தேர்தல் களத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். அமித்ஷா கூட்டத்துக்கு போலீஸார் மறைமுக நெருக்கடி அளிக்கின்றனர். போலீஸார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். போலீஸார் பாரபட்சமின்றி செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

தமிழக வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. மோடி, அமித்ஷா வருகைக்கு பின்னர் இவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முடிவு செய்வர். கன்னியாகுமரி, கோவை, நீலகிரி தவிர்த்து தஞ்சை, நாகை, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களிலும் பாஜக பலமாக உள்ளது. இதனால் தேர்தல் முடிவில் அதிசயம் ஏற்படும்.

தமிழகத்தில் முதலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியவர் ஜெயலலிதா. ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடாமல் இருப்பது அக்கட்சிக்கு பலவீனமாகும். இது அதிமுக தோல்விக்கு காரணமாக இருக்கும். திமுகவில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என இரு அதிகார மையங்கள் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தால் இருவரில் யார் முதல்வராக பதவியேற்பார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கருணாநிதி நூறு ஆண்டு வாழ பாஜக வாழ்த்துகிறது. அவர் நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தால் தமிழகம் பின்னடைவை சந்திக்கும். தேர்தல் வரை மக்கள் நலக்கூட்டணி நீடித்தால் அதிசயம். விஜயகாந்த்தின் வாக்கு வங்கி என்பது ஒரு மாயத்தோற்றமாகும் என்றார்.

மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிராமன், ஹரிஹரன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in