

தந்தை செய்த தவறுக்கு பிள்ளையை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்று சொல்லும் பாளையங்கோட்டை மத்திய சிறையின் மனநல ஆலோசகர் கே.ஆர்.ராஜா, ஆயுள் கைதிகளின் குழந்தைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் மட்டும் 468 பேர் உள்ளனர். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த இவர்களின் குழந்தைகள் 243 பேரை, 12 நாட்கள் 2,908 கி.மீ. பயணம் செய்து சந்தித்திருக்கிறார் மாற்றுத் திறனாளியான ராஜா. எதற்காக இந்த சந்திப்பு என்பதை அவரே விளக்குகிறார்...
கள்ளக்குறிச்சிதான் எனக்கு சொந்த ஊர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சமூக பணியியலில் மன நிபுணத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கைதிகளை சந்தித்துப் பேசுவதற்காக புதுச்சேரி ஜெயிலுக்குப் போனேன். அங்கிருந்த ஆயுள் கைதிகள் 70 பேரையும் பேட்டி எடுத்தேன். அதில் ஒரு கைதி, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொலை செய்தவர். அவருக்கு மூன்று குழந்தைகள். ஆனால், 7 வருடங்களாக அவரை யாருமே வந்து பார்க்கவில்லை. ‘ஆயுளைவிட இதுதான் எனக்கு பெரிய தண்டனை’ என்று சொல்லி அழுதார் அந்தக் கைதி.
முகவரி வாங்கிக் கொண்டு, அவரது குழந்தைகளைப் போய் பார்த்தேன். கவனிக்க ஆள் இல்லாததால் மூவருமே படிப்பை விட்டுவிட்டார்கள். அவர்களை காப்பகங்களில் சேர்த்து படிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ‘அப்பனுக்கு உள்ள புத்திதான் புள்ளைகளுக்கும் இருக்கும்’ என்று சொல்லி சேர்க்க மறுத்துவிட்டார்கள். தந்தை செய்த தவறுக்கு பிள்ளைகள் என்ன செய்யும்? தகப்பன் கொலைகாரர் என்பதற்காக பிள்ளைகளை தண்டிக்கிறார்களே.. என்று வேதனைப்பட்டேன்.
2010-ல் படிப்பை முடித்துவிட்டு உலக அளவில் ஜெயில் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இந்திய அளவில் கைதிகளுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதை குமரி முனையிலிருந்து தொடங்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக பாளையங்கோட்டை சிறையை தேர்வு செய்து, கடந்த ஆண்டு மார்ச்சில் சிறைக்குள் அடியெடுத்து வைத்தேன்.
அங்கே 468 ஆயுள் கைதிகள் இருந்தார்கள். அவர்களில் பலபேரை கடந்த 8 வருடங்களாக யாருமே வந்து சந்திக்கவில்லை. அவர்களின் குழந்தைகள் மொத்தம் 243 பேர். மனைவியை கொலை செய்த கைதிகளின் குழந்தைகள் மட்டும் 48 பேர். கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் இந்தக் குழந்தைகள் பற்றிய விவரங்களைச் சேகரித்தேன். சிறைக்குள் கைதிகளின் மனநிலையை மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டேன்.
உறவுகள் வந்து பார்க்காத தால் விரக்தியின் விளிம்பில் இருந்த கைதிகளை சமாதானப் படுத்தினேன். அவர்களில் 48 பேரின் உறவினர்களை ஜெயிலுக்கு வரவழைத்து சந்திக்க வைத்தேன். கைதிகளின் மன இறுக்கத்தை போக்குவதற்காக ஜெயிலுக்குள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினேன். கண் சிகிச்சை முகாம் நடத்தி 79 கைதிகளுக்கு மூக்குக் கண்ணாடி வாங்கித் தந்தேன். 60 வயதுக்கு மேற்பட்ட 68 கைதிகளுக்கு டாக்டர் ஒருவர் மூலம் ஸ்வெட்டர் வாங்கித் தந்தேன்.
இதனால், கைதிகள் நான் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு வந்தார்கள். இதற்கு முன்பு, பாளை சிறையில் கைதிகள் தற்கொலை அடிக்கடி நடக்கும். நான் வந்த பிறகு, தற்கொலை அறவே நின்றுவிட்டது. அடுத்தகட்டமாக, கைதிகளின் குழந்தைகள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக கடந்த மே 18-ம் தேதியிலிருந்து 29-ம் தேதி வரை 12 நாட்கள் பயணம் செய்து அவர்களை நேரில் சந்தித்தேன்.
அந்தக் குழந்தைகளில் சிலருக்கு நண்பர்கள் மூலம் படிப்புக்கு உதவி செய்தேன். 12 குழந்தைகளை ஹாஸ்டல்களில் சேர்த்து விட்டேன். இன்னும் சிலரது படிப்புத் தேவைகளுக்காக நண்பர்களிடம் உதவி கேட்டிருக்கிறேன். கைதிகளின் குழந்தைகளை கவனிக்காமல் விட்டால் அடுத்த தலைமுறை தடம்மாறிப் போய்விடும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ராஜா.
பாளை சிறையில் இவர் செய்த சேவைக்கு நல்ல பலன் கிடைத்ததால், தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்தியச் சிறைகளிலும் இந்த ஆண்டு தலா இரண்டு பேரை மதிப்பு ஊதிய அடிப்படையில் மன நல ஆலோசகர்களாக நியமித்திருக்கிறது சிறைத் துறை. பாளையங்கோட்டையில் ராஜாவுக்கு இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
‘‘கொலை செய்யுமளவுக்கு மனதை பாதித்த விஷயம் எது வென்று கண்டுபிடித்து அதற்கான மருந்தைக் கொடுக்காமல் கொலை காரரை ஜெயிலுக்குள் அடைத்து வைத்து மூன்று வேளை சோறு மட்டும் போடுவது, மருத்துவரே இல்லாத மருத்துவமனையில் நோயாளியை சேர்ப்பதற்குச் சமம்’’ என்கிறார் ராஜா.