

தாம்பரம்: சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் மாற்று இடம் பெற மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரி கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏரியில் உள்ள 450 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீர்வள ஆதாரத் துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. 71 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள கட்டிடங்கள் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன.
ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறைமலை நகர் அருகே தைலாவரம், பெருங்களத்தூர் சசிவரதன் நகர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாற்று வீடு வழங்குவதற்கான டோக்கன் வழங்க, மேம்பாட்டு வாரிய பொறியாளர்கள், வருவாய் மற்றும் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதையறிந்த, 100-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். யாருக்கும் டோக்கன் வழங்கக் கூடாது என்று கூறினர். “விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம்” என்று, அதிகாரிகள் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டோக்கன் வாங்க யாருக்கும் விருப்பமில்லை என்று ஆக்கிரமிப்பாளர்கள் கூறியதை அடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.