விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து பரிசீலனை

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து பரிசீலனை
Updated on
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் புதிய மேலாண்மை இயக்குநராக பதவியேற்றுள்ள முதன்மைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்தில் செய்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியது:

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்க பாதையில் திருவொற்றியூர் தேரடி ரயில் நிலையத்துக்கு அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு நகரும் படிக்கட்டு வசதி கேட்டுள்ளனர். இதுபோல, ஆயிரம் விளக்கு, சின்னமலை ஆகிய நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது உண்மைதான்.போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பூந்தமல்லி - போரூர் பாதையில் பணிகள் வேகமாக நடக்கின்றன. விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு முழுமையான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. தாம்பரம் - வேளச்சேரி இலகு ரயில் திட்டம் அடுத்தகட்ட ஆய்வில் உள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரயில்கள் வாங்குவது தொடர்பாக டெண்டர் விட்டு முடிவு செய்யப்படும் என்றார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (இயக்ககப் பிரிவு), டி.அர்ச்சுனன் (திட்டங்கள்), பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி) உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in