

சென்னை: சென்னை மாநகராட்சி சாலைகளில் "பார்வையாளர்கள், பொதுமக்கள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை" என்று சாலையின் தொடக்கத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் என்று பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சாலைகளில் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு வாசிகள் இணைந்து ‘செக் போஸ்ட்’ அமைந்து உள்ளனர். இது போன்று சென்னை, புரசைவாக்கம் காந்தி அவென்யூ, ஈ.வெ.ரா பெரியார் சாலையில் செக்ஸ்ட் போஸ்ட் அமைக்கப்பட்டு இருந்தது
இது தொடர்பான செய்தி இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சென்று இந்த செக் போஸ்ட்டுகளை அகற்றினர்.
இந்நிலையில், சென்னையில் ஒரு தெருவில் "பார்வையாளர்கள், பொதுமக்கள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை" என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் அவின்யூ என்ற சாலையில் இது போன்ற போடுகள் வைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் இதுபோன்ற போடுகள் வைக்கப்பட்டுள்ளது. சாலையின் தொடகத்தில் சுவரில் "பார்வையாளர்கள், பொதுமக்கள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை" என்று சிறப்பு நிறத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து சாலையின் உள்ளே கூண்டு போடு ஒன்று உள்ளது. அந்த கூண்டில் பார்வையாளர்களுக்கு அனுமதி என்று பெரிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவலாளி ஒருவர் இந்த கூண்டுக்கு முன்பு அமர்ந்து யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறார்.