Published : 05 Jun 2022 06:29 PM
Last Updated : 05 Jun 2022 06:29 PM

இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி | செக் போஸ்ட்டுகள் அகற்றம்; நடவடிக்கை தொடரும்: சென்னை மாநகராட்சி

சென்னை: இந்து தமிழ் திசை செய்தி எதிரொலியாக சென்னையில் ஒரு சில சாலைகளின் நுழைவு வாயிலில் குடியிருப்புவாசிகள் அமைத்த செக் போஸ்ட்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். மேலும் இது போன்ற செக் போஸ்ட் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் என்று பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் யார் வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆனால் ஒரு சில சாலைகளில் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு வாசிகள் இணைந்து ‘செக் போஸ்ட்’ அமைத்துள்ளனர்.

இந்த செக் போஸ்ட்களுக்கு அருகில் காவலாளி ஒருவரை பணிக்கு அமர்த்தி, அவரிடம் ‘எங்கே போகிறோம்’ என்பதை கூறினால் மட்டுமே சாலைகளுக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இது போன்று சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் சாலையில், கங்காதீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் காந்தி அவென்யூ ஈ.வெ.ரா பெரியார் சாலையில் நேரு பூங்கா சிக்னல், கே.ஜெ மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஈ.வெ.ரா 2-வது சந்திலும் செக்ஸ்ட் போஸ்ட் அமைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சென்று இந்த செக் போஸ்ட்டுகளை அகற்றினர்.

இது தொடர்பாக அண்ணாநகர் மண்டல அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான முருகேசன் கூறுகையில்" பாதுகாப்பை காரணமாக கூறி மாநகராட்சிக்கு சொந்தமான தெருக்களில் இது வைக்க அனுமதி இல்லை. எனவே மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தல் படி சம்பந்தபட்ட தெருவைச் சேர்ந்தவர்களை அழைத்து பேசி அறிவுறுத்தப்பட்டு செக் போஸ்ட் அகற்றப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், " பாதுகாப்பு காரணங்களுக்கா இது போன்று வைத்தால் அவரச காலத்தில் எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்படும். பாதுகாப்பு காரணம் என்று இதை நியாப்படுத்த முடியாது. எனவே இது போன்று சென்னை மாநகராட்சியின் எந்த பகுதியில் வைத்தாலும் அவற்றை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x