

ஜனநாயகத்துக்கு ஏற்ற கூட்டாட்சியை உருவாக்கும் நோக்கில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி உருவாகியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் பிரச்சாரத்தின்போது பேசினார்.
கோவை தெற்கு தொகுதியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று முன்தினம் பேசியதாவது:
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாற்று அரசியல் கொள்கையை இக்கூட்டணி தமிழகத்தில் செய்து காட்டியுள்ளது. 47 ஆண்டு கால போலி திராவிடக் இயக்கங்களின் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவும், 7.5 கோடி தமிழ் மக்களின் வாழ்வுக்கு எது தேவை என்பதை அறிந்தும் இக் கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்துக்கு ஏற்ற ஒரு கூட்டாட்சியை உருவாக்கும் நோக்கில் இந்த கூட்டணி உருவாகியுள்ளது.
ஆனால், அதிமுக, திமுக கட்சிகளோ ஒற்றை நபர்களையே முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கின்றன. இவ்விரு கட்சிகளுக்கு இணையாக ஊழல் செய்த கட்சிகள் இந்தியாவிலேயே இல்லை என்று கூறலாம். ஏற்கெனவே பல முறை ஆட்சியில் இருந்த திமுக, அதிமுகவால் ஏன் லோக்ஆயுக்தா சட்டத்தை கொண்டு வர முடியவில்லை? ஏனென்றால், அச்சட்டத்தால் அவ்விரு கட்சியினருமே பாதிக்கப்படுவார்கள் என்பதே உண்மை. ஊழல் என்பது மேல்மட்டத்தில்தான் அதிகமாக இருக்கிறது.
அதுவே அனைத்து ஊழல்களுக்கும் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கிறது. எனவே அந்த ஊழலை ஒழிக்க லோக்அயுத்தா என்ற சட்டத்தை மக்கள் நலக்கூட்டணி,தேமுதிக, தமாகா கூட்டணி கொண்டு வரும்.
மாநிலத்தின் வளர்ச்சி குறித்து திமுக பேசுகிறது. ஊர் ஊராகச் சென்று மாநிலத்தை வளர்க்கப் போவதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அதற்கு அவர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது? வெளிநாட்டு நிறுவனங்களின் மூலதனத்தை இங்கு கொட்டி நமது இளைஞர்களை அடிமாடுகள் போல் நடத்தி, இயற்கை வளத்தை சூறையாடுவதா வளர்ச்சி? தமிழகத்தின் உள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கும் இங்கேயே வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அதுதான் வளர்ச்சியாக கருதமுடியும். ஆனால் பாஜகவும், திமுகவும் அந்நியர்கள் வருகையைத்தான் வளர்ச்சியாகக் கருதுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.