

புதுச்சேரி: மின்துறை தனியார்மயமாக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள கொள்கை முடிவை கண்டித்து புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனியார்மயத்துக்கு மாநில அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை ஏற்படுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து மின்துறை போராட்டக் குழுவினர் மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்து அறிவித்தனர்.
அதன்படி இன்று மின்துறை தலைமை அலுவலகத்தில் மின்துறை மண்டலம் 1 பிரிவு பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர் 200க்கும் மேற்பட்டோர் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். புதுச்சேரி மின்துறை தனியார்மயத்தை விரட்டியடித்து, மின்துறை அரசின் துறையாகவே தொடர செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளின் கொள்கை கண்டித்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக போராட்டக் குழுவின் தலைவர் அருள்மொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவினை மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மின் துறை அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டக்குழு ஒன்றை உருவாக்கி 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
ஆனால் கடந்த மாதம் மத்திய அமைச்சர் வருகைக்கு பிறகு இவை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் நமக்கு உறுதுணையாக இருந்த மாநில அரசும், துறையும் இப்போது பல்டியடித்துவிட்டனர். தற்போது தனியார் மயத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதனை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதன் காரணமாக போராட்டக்குழு, அமைச்சரவை முன்பு கொடுத்த வாக்குறுதியின் மீறலை சுட்டிக்காட்டி போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளாம்.
எங்களை வருத்திக்கொண்டு செய்கின்ற போராட்டத்துடன், சட்ட ரீதியான போராட்டங்களையும் கையில் எடுக்கும் முனைப்பில் இருக்கின்றோம். 3 கட்ட போராட்டங்களை அறிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றோம். இதன் அடுத்த நகர்வாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றோம். பிரிவு வாரியாக வருகின்ற 14ம் தேதி வரை இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. அரசும், துறையும் எங்களை இதுவரை அழைத்து பேசாதது வருத்தம் அளிக்கிறது.
ஏனென்றால் நாங்கள் இப்போது கையில் எடுத்துள்ள போராட்டம் பொதுமக்களை வஞ்சிக்கன்ற போராட்டம் இல்லை. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிக்கொண்டே தான் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். பொதுமக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு கிடைக்க வேண்டும். தனியார் மயத்தினால் ஏற்படும் இன்னல்களை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் போராட்டங்களை செய்து வருகிறோம். இனி வரும் காலங்களில் அடுத்தக்கட்ட நகர்வுகளை போராட்டக்குழு விரைவில் அறிவிக்கும்" என்று அருள்மொழி கூறினார்.