

மதுரை: பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் ஜாமீன் மனுக்களை திரும்பப் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜை 2015-ல் திருச்செங்கோட்டிலிருந்து கடத்திய கும்பல், ஆணவக் கொலை செய்தது. இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை (இறுதி மூச்சு இருக்கும் வரை) வழங்கியது.
ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது கோகுல்ராஜ் தாயார் சித்ரா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளனர். ஜாமீன் மனுவை பொறுத்தவரை கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தபோது மனுதாரரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தற்போது மனுதாரர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க முடியாது. எனவே, ஜாமீன் கேட்டு மனுதாரரர்கள் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற வேண்டும்.
அதேநேரம் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுக்கலாம். இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்ற பதிவாளர் பெற வேண்டும் என்று தெரிவித்தனர். அடுத்த விசாரணையை ஜூலை 6-க்கு தள்ளிவைத்துநீதிபதிகள் உத்தரவிட்டனர்.