

உண்மையான மாற்றம் மக்களால்தான் ஏற்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தெரிவித்தார்.
தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக் முகமதுவை ஆதரித்து சிந்தாமணி அண்ணா சிலை பகுதியில் அவர் பேசியது:
கட்சி, ஜாதி, மதம் அடிப்படையில் வேட்பாளரை மக்கள் பார்க்கக் கூடாது. ஏனெனில், இவை சோறு போடாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் படித்தவரா, எளிதில் அணுகக் கூடியவரா, கை சுத்தமானவரா, குற்றமற்றவரா என்றுதான் பார்க்க வேண்டும். இதையெல்லாம் கவனித்து வாக்களிக்கும்போதுதான் தமிழ்நாட்டில் உண்மையான மாற்றம் வரும்.
அதேபோல, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வந்து எவ்வளவு பேசினாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாற்றம் என்பது மக்களிடத்தில் இருந்துதான் வர வேண்டும்.
தேர்தல் விதிகள் அமலில் உள்ள இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் இதுவரை ரூ.100 கோடியை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலை வெட்கக்கேடானது.
தேர்தல் ஆணையம், போலீஸார் மத்தியில் நேர்மையானவர்கள் உள்ளனர். அவர்களால் பணம் கொடுப்பதை முழுமையாக தடுக்க முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுக்க வீட்டுக்கு வருபவர்களை மக்கள்தான் தூக்கி ஏறிய வேண்டும்.
ஆந்திரம், தெலுங்கானா மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தை முதன்மை மாநிலமாகக் கொண்டு வர போட்டி போடுகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கோவைக்கு வந்து தொழிலதிபர்களைச் சந்தித்து, தன் மாநிலத்துக்கு வந்து தொழில் தொடங்குமாறும், அனைத்து அனுமதிகளும் ஒரே மாதத்தில் எளிதில் வழங்கப்படும் என்றும் அழைப்பு விடுக்கிறார். ஆனால், அந்தச் செயல்பாடு தமிழ்நாட்டில் இல்லை.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் தமிழகம் சிறப்பாக இல்லை. அப்போது, மின் வெட்டு காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. புதிய தொழில் தொடங்க முடியவில்லை. எதிலும் ஊழல் இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தால் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்று இப்போது பிரச்சாரம் செய்கின்றனர்.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ரூ.75 கோடி மதிப்பில் இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளன. மக்கள் வரிப் பணத்தில்தான் இலவசத் திட்டங்களை அரசுகள் நிறைவேற்றும். இலவச திட்டங்களைச் செயல்படுத்தும் வரை மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தரவே முடியாது.
நாட்டைத் திருத்துவதற்கு புரட்சி தேவை. அந்தப் புரட்சி இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் நிச்சயம் வெடிக்கும். அப்போது, லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீஸார், நீதிபதிகள் என அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வரும் என்றார்.
மதிமுக மாணவரணிச் செயலாளர் தமிழ் மாணிக்கம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, தாராநல்லூர் கீரைக்கொல்லை, எடத்தெரு அண்ணா சிலை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் துரை வையாபுரி பிரச்சாரம் செய்தார்.