Published : 03 Jun 2022 06:49 AM
Last Updated : 03 Jun 2022 06:49 AM

அடுத்தடுத்த இரு ரயில்வே கேட்டால் வாகன நெரிசல்: ஆய்வுடன் நின்ற மேம்பாலம் கட்டும் திட்டம் புத்துயிர் பெறுமா? - நெட்டவேலாம்பாளையம் மக்கள் எதிர்பார்ப்பு

திருச்செங்கோடு-குமாரபாளையம் செல்லும் சாலையில் உள்ள நெட்டவேலாம்பாளையத்தில் உள்ள ரயில்வே கிராசிங் வழியாக செல்லும் வாகனங்கள். படம்: கி.பார்த்திபன்

நாமக்கல்: திருச்செங்கோடு-குமாரபாளையம் செல்லும் சாலையில் உள்ள நெட்டவேலாம்பாளையத்தில் அடுத்தடுத்து உள்ள இரு ரயில்வே கிராசிங் இடையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர் நெட்டவேலாம்பாளையத்தில் அடுத்தடுத்து இரு ரயில்வே கிராசிங் உள்ளன. இது கேரளா-சென்னை செல்லும் முக்கிய ரயில் வழித்தடம் என்பதால், இந்த வழிதடத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் அடுத்தடுத்து செல்வது வழக்கம். அந்நேரங்களில் இரு ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகள் மூடப்படும்.

அந்த நேரங்களில் இரு ரயில்வே கிராசிங்கின் இருபுறமும் வாகனப் போக்குவரத்து தடை ஏற்பட்டு, இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதும், கேட் திறந்தபின்னர் அடுத்தடுத்துள்ள ரயில்வே கேட்களில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்ல கூடுதல் நேரம் ஆகும் நிலையுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இரு ரயில்வே கிராசிங் இடையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ரயில்வே பாலம் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டு ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டன. அதன்பின்னர் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதனால், அப்பகுதியில் வழக்கம்போல இரு கேட்களும் மூடப்படும்போது, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தொடர்கிறது என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக நெட்டவேலாம்பாளையம் பொதுமக்கள் கூறியதாவது: திருச்செங்கோடு-குமாரபாளையம் இடையே பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள இரு ரயில்வே கிராசிங் வழியாக நாள் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என ஏாளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், இரு ரயில்வே கேட் மூடப்படும்போது, போக்குவரத்து தடை ஏற்பட்டு நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிகள் திறந்தால் இப்போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும்.

எனவே, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, முக்கிய சாலை என்கிற அடிப்படையில் இரு ரயில்வேகேட்டுக்கும் இடையில் ரயில்வே மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x