(கோப்புப் படம்) - ஜெ.மனோகரன்.
(கோப்புப் படம்) - ஜெ.மனோகரன்.

ஆர்.டி.ஐ ஆர்வலரை நள்ளிரவில் விசாரித்த கோவை போலீஸ் - ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்

Published on

கோவை: ஆர்.டி.ஐ சட்டம் மூலம் கேள்வி கேட்ட ஆர்வலரை நள்ளிரவில் விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை திருமலையாம்பாளையம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். கல்லூரி பேராசிரியர். சமூக ஆர்வலரான இவர், சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘நான் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் கேள்விகளை கேட்டேன். அதற்கு பதில் கிடைத்தது. அதேசமயம், பேரூராட்சி ஊழியர் ஒருவர், இதுபோல் கேட்டக்கூடாது எனக்கு மிரட்டல் விடுத்தார். அது தொடர்பாக க.க.சாவடி காவல் நிலையத்திலும், ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தேன்.

காவல்துறை அதிகாரிகள் மிரட்டல் விசாரணை

இந்நிலையில் அதன்பிறகான சில நாள் கழித்து, அப்போதைய மதுக்கரை (சர்க்கிள்) காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி (வடவள்ளி - தொண்டாமுத்தூர் சர்க்கிள்) காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் நள்ளிரவில் எனது வீட்டுக்கு வந்து விசாரணை எனக்கூறி என்னை வெளியே அழைத்துச் சென்றனர். கேள்வி கேட்டதற்காக எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் என்னிடம் விசாரித்தனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.

ஒழுங்கு நடவடிக்கைரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையத்தினர் விசாரித்தனர். விசாரணையின் இறுதியில் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நேற்று (மே 31-ம் தேதி) உத்தரவு பிறப்பித்தது. அதில், மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட ரமேஷ்குமாருக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதை காவல் ஆய்வாளர்கள் தூயமணி வெள்ளைச்சாமி, மணிவண்ணன் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரமும், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமாரிடம் இருந்து ரூ.50 ஆயிரமும் ஊதியத்தில் இருந்து வசூலித்து மனுதாரர் ரமேஷ்குமாருக்கு வழங்க வேண்டும். மேலும், மேற்கண்ட 3 காவல்துறை அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in