மோடி புகழ்ந்த 'தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை'- உரிய அங்கீகாரம் கிடைத்ததாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மகிழ்ச்சி

பிரதமர் மோடியால் புகழப்பட்ட தஞ்சை தாரகைகள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்.
பிரதமர் மோடியால் புகழப்பட்ட தஞ்சை தாரகைகள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்.
Updated on
2 min read

தஞ்சாவூர்: பிரதமர் மோடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை பாராட்டியதன்மூலம் உரிய அங்கீகாரம் கிடைத்ததாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்தி வானொலி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தஞ்சாவூரிலிருந்து, தாரகை மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி பெண்கள் எனக்கு புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள் அனுப்பியுள்ளனர். இதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தலையாட்டி பொம்மை அனுப்பிய அந்த சுய உதவி குழுவை சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசியதன் மூலம் இந்தியா முழுவதும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் சிறப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களின் சிறப்பு பரவியது. மேலும் தஞ்சை தாரகைகள் மகளிர் சுய உதவிக்குழு பெண்களால் தஞ்சாவூருக்கு மட்டுமல்லாது தமிழகத்துக்கும் பெருமை கிடைத்துள்ளது.

இதுகுறித்து தஞ்சை தாரகைகள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடியை சேர்ந்த பி.மணிமேகலை கூறியதாவது: ''தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சீரிய முயற்சியால் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தஞ்சை தாரகைகள் மகளிர் சுயஉதவி குழு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டது. இதனை கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இந்த அங்காடியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள், பல்லாங்குழி, புல்லாங்குழல், கூடைகள், சணல் பைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த பொருட்கள் எளிதாக விற்பனை செய்ய முடிகிறது. இந்த விற்பனை மூலம் பெண்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. எங்களை போன்ற பெண்களுக்கு சுய உதவி குழு மூலம் விடிவு காலம் பிறந்துள்ளது. நாங்கள் மகளிர் சுயஉதவி குழு தயாரித்த அனைத்துப் பொருட்களின் விற்பனை வருகிறோம். கடந்த ஏப்ரல் மாதம் இரு தலையாட்டி பொம்மைகள், இரு நடன மங்கை பொம்மைகளை பிரதமர் மோடிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலமாக அனுப்பி இருந்தோம்.

நேற்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாங்கள் அனுப்பி இருந்த தலையாட்டி பொம்மைகள் பற்றி பேசியது பெருமையாக உள்ளது. இனி மற்ற பெண்களும் சுயமாக பொருட்கள் விற்பனை செய்ய ஊக்கமாக இருக்கும். பிரதமர் மோடி பேசியதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு கூடுதலாக புத்துயிர் கிடைக்கும். இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியருக்கும், மகளிர் திட்ட அலுவலருக்கும், மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கே சேரும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in