45 நாட்கள் தாமதமாக தொடங்கிய சீசன்: மல்கோவா ரக மாம்பழங்கள் கிலோ ரூ.100க்கு விற்பனை

45 நாட்கள் தாமதமாக தொடங்கிய சீசன்: மல்கோவா ரக மாம்பழங்கள் கிலோ ரூ.100க்கு விற்பனை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் சீசன் 45 நாட்கள் தாமதமாக தொடங்கியது. போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்து விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாங்கனி மாவட்டம் என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுவை மிகுந்த ரகங்களான அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா, பீத்தர், செந்தூரா, நீலம் போன்ற வகை மாம்பழங் கள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன.

இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாமரங்கள் பொதுவாக டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரி வரை பூ, பூக்கும். கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் பெய்த மழை காரணமாக மாமரங்களில் பூக்கள் நிறைந்து காணப்பட்டது.

இதனால் மா விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பினர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாமரங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் கோடை வெயில் 108 டிகிரியை கடந்ததால், மா வளர்ச்சி பெறாமல் சுருங்கியது. ஏப்ரல் மாதத்தில் தொடங்க வேண்டிய மாம்பழம் சீசன், இந்த ஆண்டு சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது.

இதுகுறித்து மா வியாபாரிகள், விவசாயிகள் சிலர் கூறியதாவது, எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் காய்கள் திரட்சி அடைவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது கோடை மழை பெய்துள் ளதால் மாங்காய்கள் நல்ல திரட்சியுடன் விளைச்சலுக்கு வரும்.

சுவை மிகுந்த மல்கோவா, செந்தூரா, அல் போன்சா, காதர், பீத்தர், ஊறுகாய் மாங்காய், ரூமானி, இமாம்பசந்த், சக்கரை குட்டி உள்ளிட்ட ரக மாம்பழங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள் ளன. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்ட ணம் பகுதிகளில் உள்ள மண்டிக ளுக்கு மாங்காய்களை கொண்டு வரும் விவசாயிகள் ஏலத்தில் விடுகின்றனர்.

விளைச்சல் குறைவால் விலை கூடுதலாக கிடைக்கும் எனவும், மாம்பழங்கள் விலை வழக்கத்தைவிட சற்று அதிகரிக்கும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in