தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க அரசு ஒப்புதலா?

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க அரசு ஒப்புதலா?
Updated on
1 min read

சமூக வலைதளங்களில் உலாவரும் தகவலுக்கு அதிகாரிகள் மறுப்பு

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சமூக வலை தளங்களில் தவறான தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே, விவசா யம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடும் பெற்றோர், அதிகா லையிலேயே சென்று விடுவதால், குழந்தைகளுக்கு உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் கிராமப்புற குழந்தைகள் பெரும்பாலானோர் காலையில் சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருகின்றனர். இதனால் ரத்தசோகை, சத்துக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மதிய உணவுத் திட்டம் போலவே காலையிலும் சிற்றுண்டி வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக முதல்வராக ஜெய லலிதா, கடந்த 23-ம் தேதி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டபோது விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி, மதுக்கடைகள் நேரம் குறைப்பு மற்றும் 500 கடைகள் மூடல், திருமண நிதியுதவித் திட்டத்தில் வழங்கப்பட்ட 4 கிராம் தங்கம், இனி 8 கிராமாக உயர்த்துவது, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், மாணவர் களுக்கு மதிய உணவு வழங்குவது போல தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும் என ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அந்த திட்டத்தில் முதல்வர் கையெழுத்திட்டதாக வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன. பொதுமக்களும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டனர். மேலும், ஒவ்வொரு நாளும் மாணவர் களுக்கு என்னென்ன கலவை உணவுகள் வழங்கப்பட உள்ளன என்பதற்கான பட்டியல் குறித்த விவரங்களும் பரவி வருகிறது. இதனால் காலை உணவு பள்ளியிலேயே கிடைக்கும் என பெற்றோரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆனால், காலை சிற்றுண்டி குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை.இதுகுறித்து கல்வித் துறையினர் கூறியதாவது: மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவது குறித்த தகவல்கள் மட்டும் பரவி வருகிறதே தவிர, அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. அதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டாலும், சில மாதங்களுக்குப் பின்னரே அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in