புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்கவைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்கவைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி நேரு வீதியில் பெரிய மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு காய்கறிகள், பழங்கள், பூக்கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளில் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மற்றும் உணவு கடத்தல் பாதுகாப்பு பிரிவு போலீஸார் இணைந்து பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இன்று (மே. 26) திடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள 2 மொத்த விற்பனை கடைகளில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு ரசாயன கல் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடையின் பின்புறம் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 பெட்டிகளில் இருந்த 1 டன் ஒட்டு மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மாம்ழங்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பாலகிருஷ்ணன் கூறும்போது, ''பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினோம். அதில் 2 கடைகளில் சோடியம் கார்பைட் கல் பயன்படுத்தி மாம்பழங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையுடன் கூடிய கிடங்கில் இருந்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அந்த கடை, கிடங்கு ஈஸ்வர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவருக்கு நாளை நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். மேலும், பெரிய மார்க்கெட்டில் உள்ள ஒரு கடைகளில் கூட பெயர் பலகையோ, உரிமையாளரின் தொடர்பு எண்ணோ என எதுவும் இல்லை. இதனால் யார் கடை நடத்துகிறார்கள். யார் உரிமையாளர் என்பது தெரியவில்லை. ஆகவே, கடைகளில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்த வேண்டுமென நகராட்சி அதிகாரியிடம் தெரிவித்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை நாளை அழிக்கவுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in