

மதுரை வடக்கு தொகுதியில் அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோபி ஷங்கர், தனது வேட்புமனு ஏற்கப்பட்ட நாளில் இருந்து தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகக் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் இடையலிங்கத்தவர் (இன்டர்செக்ஸ்) இவர் என்பது குறிப்பிடத்தக்கது. | >மதுரை வடக்கு தேர்தல் களத்தில் மாற்று பாலினத்தவர் உரிமைப் போராளி |
இரு பிரதான கட்சிகளின் ஆதரவாளர்கள் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் கூறுகிறார். அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் (>https://www.facebook.com/gopishankarmadurai/) தனக்கு வரும் கொலை மிரட்டல் குறித்து நிலைத்தகவல் பதிந்திருக்கிறார்.
கொலை மிரட்டல் நிலைத்தகவல் தொடர்பாக 'தி இந்து' தமிழ் ஆன்லைன் பிரிவுக்கு அளித்த பேட்டியில், "நேற்றிரவு (புதன்கிழமை) 10 மணியளவில் ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தேன். நான், என்னுடன் அந்த வார இதழின் நிருபர் மற்றும் புகைப்படக்காரர் இருந்தனர். தபால்தந்தி நகர் பேருந்து நிலையத்தில் நாங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது புல்லட் வண்டியில் ஒரு நபர் வந்தார். அவரை நான் அதற்கு முன்னர் பார்த்ததில்லை. அவர் வண்டியை நிறுத்திவிட்டு என்னிடம் வந்து என்னை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார். என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் அவரது செய்கைகள் இருந்தன. என் தொலைபேசியை பறித்து அதை கீழே போட்டார். என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார். மதுரையில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரது பெயரைச் சொல்லி தான் அவரது சொந்தக்காரர் எனக் கூறினார். பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
என்னுடன் இருந்த புகைப்பட நிருபர் என்னை அவரது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அந்த புல்லட் நபரை பின் தொடர்ந்தார். ஆனால், அந்த நபர் வேகமாக எங்கோ சென்று மறைந்தார். பின்னர் நாங்கள் மீண்டும் அந்த பேருந்து நிலையத்துக்கே வந்துவிட்டோம்.
நான் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தேன். ஒரு சில நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். நாங்கள் சொன்ன அடையாளங்களை வைத்துக் கொண்டு அப்பகுதியில் ரோந்து சென்றனர். திரும்பி வரும்போது புல்லட்டில் சுற்றித் திரிந்த அந்த நபரை போலீஸார் பிடித்து வந்தனர். என்னைப் பார்த்ததும் அந்த நபர் உரக்கக் கத்தினார். நான் யார் என்று தெரியாமல் என்னிடம் மோதுகிறாய். உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்றார். அந்த இடத்தில் 2 எஸ்.ஐ., ஒரு ஆய்வாளர் இருந்தனர். ஆனால் யாருமே அந்த நபரை தடுக்கவில்லை. அவர் தொடர்ந்து கூச்சிலிட்டுக் கொண்டிருந்தார்.
நான் இருக்கும் பகுதி தல்லாகுளம் போலீஸ் சரகதுக்கு உட்பட்டது. ஆனால், எங்களை போலீஸார் கூடல்நகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நான் கொலை மிரட்டல் புகார் கொடுக்க விரும்புவதாகக் கூறினேன். ஆனால், போலீஸார் ஏதாவது பெட்டி கேஸ் (சிறிய வழக்கு) போடுவதாகக் கூறினர். என்னை மிரட்டிய நபரோ தனது சொந்த வீட்டில் அமர்ந்திருப்பது போல் காவல் நிலையத்தில் சொகுசாக கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தார். அங்கிருந்த சில போலீஸ்காரர்களும் கொலை மிரட்டல் எஃப்.ஐ.ஆர் பதிந்தால் உனக்குதான் சிக்கல் என என்னை சமாதானப் படுத்தினர்.
வேறு வழியில்லாமல் புகார் கொடுக்காமல் திரும்பினேன். ஒரு வேட்பாளர் மிரட்டப்படும் இத்தகைய சூழலில் தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை.
இதேபோல், இரு தினங்களுக்கு முன்னர் மற்றொரு பிரதான கட்சி தனது தோழமை கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டது. அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த என்னை பிரதான கட்சியினரின் வாகனம் ஒன்று இடித்து தள்ளுவது போல் வேகமாகச் சென்றது. நிலை தடுமாறி நான் கீழே விழுந்தேன்.
இதுதவிர இன்னும் சில தொலைபேசி மிரட்டல்களும் எனக்கு வருகின்றன. எனது வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி உறுதி செய்த நாள் முதலாகவே எனக்கு இத்தகைய மிரட்டல்கள் வருகின்றன.
நான் பிரச்சாரத்துக்கு தனியாகத்தான் செல்கிறேன். பெரிய கட்சியின் வேட்பாளர்களுக்கு மட்டுமே போலீஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர். என்னைப் போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சியின் வேட்பாளர்களுக்கு அவர்கள் பாதுகாப்பு ஏதும் அளிப்பதில்லை.
இரண்டு பெரிய கட்சியினருமே என்னை மிரட்டி வருவதால் பாதுகாப்பற்ற நிலையில் நான் இருக்கிறேன். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
என்னைப் போன்றோர் தேர்தலில் நிற்பது இதுவே முதல் முறை. எங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக பெரிய கட்சியினர் மிரட்டல் விடுக்கின்றனர். ஜனநாயகம் தோற்றுவிட்டது என்றுதான் சொல்வேன்.
இத்தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் எனக்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைக்காது என்பதால் என்னை மிரட்டும் பிரதான கட்சிகளுக்கு நான் நேரடி போட்டியில்லை என்பது எனக்கே புரிகிறது.
இருப்பினும், நான் தமிழக தேர்தலில் போட்டியிடும் முதல் இடையலிங்க இளைஞர் என்பதால் என்னைப் பற்றி தினமும் ஏதாவது ஓர் ஊடகத்தில் செய்தி வருகிறது.
ஊடக வெளிச்சம் என் மீது பாய்வதால், மக்கள் என்னை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இதுகூட அந்த பிரதான கட்சிகளால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே என்னை மிரட்டுகின்றனர்" என்றார்.