Published : 23 May 2022 06:34 AM
Last Updated : 23 May 2022 06:34 AM
உதகை: உதகையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால், தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம்மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்ற சிறப்பு அலங்காரத்தின் ஒரு பகுதி சரிந்து சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடந்த 10 நாட்களாக வானிலை மேகமூட்டமாக காணப்படுகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், காற்றுடன் மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மழை காரணமாக மலர் கண்காட்சி நடைபெற்றுவரும் உதகை தாவரவியல் பூங்கா முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்றத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உதகையில் முதல்வர் உள்ள நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண வந்தனர். மலர் அலங்காரங்கள் முன்பு நின்று செல்ஃபி, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவ்வப்போது பெய்தமழையிலும் குடை பிடித்தபடி மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
3 நாட்களில் 40 ஆயிரம் பேர்
கடந்த 3 நாட்களில் மட்டும் மலர் கண்காட்சியை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்ததாக, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மலர் கண்காட்சி நாளை (மே 24) நிறைவடைகிறது.
மழை அளவு (மி.மீ.)
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நடுவட்டத்தில் 19 மி.மீ. மழை பதிவானது.
தேவாலா -12, அவலாஞ்சி - 11, உதகை - 10.2, பந்தலூர் - 10, கேத்தி - 9, கூடலூர் - 7, கிளன்மார்கன் - 7, ஓவேலி - 7.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT