

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மாதவரம் சட்டப்பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.எஸ்.கண்ணனை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செங்குன்றம் பகுதியில் வாக்குகள் கேட்டார்.அப்போது அவர் பேசியதாவது:
இந்த சட்டப்பேரவை தேர்தல் மாற்று அரசியலை முன்வைத்து நடைபெறுகிற தேர்தலாகும்.அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி விட்டார்கள்.வெளிப்படையான நிர்வாகம் இல்லாமல் தனிநபர் அதிகாரமும் மேலோங்கியுள்ளது. இந்நிலை மாற மக்கள் நலக்கூட்டணியை தமிழக வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்.
மதுவிலக்கிற்காக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் இறந்தபோதுகூட முதல்வர் ஜெயலலிதா வாய் திறக்காமல் இருந்தார்.மக்கள் நலக்கூட்டணி மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி முழுஅடைப்பு போராட்டம் நடத்தியது.எதற்கும் பேசாமல் இருந்த முதல்வர், இப்போது தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக படிப்படியாக மதுவை குறைப்போம் என்று சொல்வது பொய்யான பேச்சாகும்.அதிமுக, திமுக இரு கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்த மாட்டார்கள். ஏனென்றால், மதுவை உற்பத்தி செய்யும் ஆலைகளை இந்த இரு கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் நடத்துகிறார்கள்.அதனால் வருகிற லாபத்தை இழக்க அவர்கள் தயாராக இல்லை.
அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. இலவச திட்டங்களை அறிவித்தால் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். அவரது எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.
6 கட்சிகள் நாங்கள் ஒன்றாய் சேர்ந்து இந்த சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.மற்ற கட்சிகளைப் போல நாங்கள் பண செல்வாக்கு உள்ள கட்சிகள் அல்ல. மக்களிடம் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது.மக்கள் மாற்றத்தை விரும்புகிறாரகள் என்று உறுதியாய் நாங்கள் நம்புவதால்தான், எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் மக்கள் தொண்டர்களாக களத்தில் இறக்கியுள்ளோம்.மக்கள் நலக்கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்தால்,மதுவில்லாத, ஊழலில்லாத,வெளிப்படையான நிர்வாகத்துடன் கூடிய ஆட்சியை அளிப்போம்'' என்று திருமாவளவன் பேசினார்.