

தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சியில் மக்கள் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. முக்கியமாக, அதிகாரப் பரவலைச் சாத்தியப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை, மே 1 அன்று கிராம சபையில் வரவு-செலவுக் கணக்கை (படிவம் 30) மக்கள் பார்வைக்கு வைத்தல் போன்ற முன்னெடுப்புகளோடு அதிகாரப்பரவல் பற்றி நிதியமைச்சர் பேசிய பல உரைகள் என அனைத்தும் அரசின் மீது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஆனால், அதிகாரப்பரவலுக்கு அப்படியே நேர்மாறாக ஒரு சட்டத் திருத்தத்தைத் தமிழ்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது. ஊராட்சியின் கீழ் செயல்படும் ஊராட்சிச் செயலர்களை இடமாற்றம் செய்யும் மற்றும் தண்டிக்கும் அதிகாரம் ஊராட்சியின் செயல் அதிகாரியான ஊராட்சித் தலைவரிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையால் நியமிக்கப்படும் அலுவலருக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 104 (இடமாற்றம்) மற்றும் 106 (தண்டிக்கும் அதிகாரம்) ஆகிய சட்டப் பிரிவுகளில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தங்களின் மூலம், இனி ஊராட்சிச் செயலரை இடமாற்றம் செய்யும்போது கிராம ஊராட்சித் தலைவரையோ, ஊராட்சி மன்றத்தையோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
உள்ளாட்சிகளுக்கு அதிகாரமளிக்கும் 73-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் முக்கிய நோக்கமே சமூகநீதியும் பொருளாதார முன்னேற்றமும்தான். ஆனால், இவ்விரண்டையும் கேள்விக்குள்ளாக்குகிறது இச்சட்டத் திருத்தம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தாண்டி ‘அரசு அலுவலர்கள்’ எனும் அதிகார வர்க்கமே தமிழ்நாட்டில் பெரும்பாலும் அதிகாரம் செலுத்திவருகிறது என்பது கண்கூடு. எளிய விளிம்புநிலை மக்களைச் சுரண்டும் இதுபோன்ற அதிகார வர்க்கத்துக்கு மேலும் அதிகாரத்தை வழங்குவதாகவும், திராவிட அரசு பேசும் சமூகநீதி, சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவல் ஆகிய அனைத்துக்கும் நேரெதிராகவும் உள்ளது இச்சட்டத் திருத்தம். மேலும், இச்சட்டத் திருத்தம் மூலம் சட்டரீதியாகவே ஊராட்சித் தலைவருக்கு மேல் அதிகாரமிக்க ஆளாகிறார், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஊராட்சிச் செயலர்.
சுயாட்சி அரசுகளான கிராம ஊராட்சிகள் (இந்திய அரசமைப்பு, கூறு 243G) அதன் செயலர்களை தாங்களே நியமிக்கும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அவர்கள் தவறு செய்தால் விசாரிக்க, தண்டிக்க இருக்கவே இருக்கிறது கிராம சபை. எனவே, இச்சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
> இது, தன்னாட்சி உறுப்பினர் வினோத் குமார் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்