

அறிஞர் அண்ணா 24.05.1958-ல் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் இப்படிக் கூறியிருக்கிறார்: ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தலைவராக வந்திருக்கும்போது அவர்களது பக்கத்தில் இருக்கக்கூடிய நிர்வாக அதிகாரி தான் அனைத்தையும் செய்ய வேண்டுமென்று இருந்தால், நாளடைவில் நல்லவர்கள் பஞ்சாயத்துகளுக்கு வரக் கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஜனநாயகத்தில் நமக்குச் சரியான இடமில்லை என்று மனமுடைந்துபோவார்கள்.’
தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சியில் மக்கள் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. முக்கியமாக, அதிகாரப் பரவலைச் சாத்தியப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை, மே 1 அன்று கிராம சபையில் வரவு-செலவுக் கணக்கை (படிவம் 30) மக்கள் பார்வைக்கு வைத்தல் போன்ற முன்னெடுப்புகளோடு அதிகாரப்பரவல் பற்றி நிதியமைச்சர் பேசிய பல உரைகள் என அனைத்தும் அரசின் மீது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஆனால், அதிகாரப்பரவலுக்கு அப்படியே நேர்மாறாக ஒரு சட்டத் திருத்தத்தைத் தமிழ்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது. ஊராட்சியின் கீழ் செயல்படும் ஊராட்சிச் செயலர்களை இடமாற்றம் செய்யும் மற்றும் தண்டிக்கும் அதிகாரம் ஊராட்சியின் செயல் அதிகாரியான ஊராட்சித் தலைவரிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையால் நியமிக்கப்படும் அலுவலருக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 104 (இடமாற்றம்) மற்றும் 106 (தண்டிக்கும் அதிகாரம்) ஆகிய சட்டப் பிரிவுகளில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தங்களின் மூலம், இனி ஊராட்சிச் செயலரை இடமாற்றம் செய்யும்போது கிராம ஊராட்சித் தலைவரையோ ஊராட்சி மன்றத்தையோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
அறிஞர் அண்ணா பாணியில் கேட்பதென்றால், ஊராட்சியிடமிருந்து ஊதியம் பெறும் செயலரை நியமிக்கும் உரிமையும் தகுதியும்கூட அந்த ஊராட்சிக்கு இல்லையா? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரை நியமிப்பது முதலமைச்சர் அலுவலகம். ஒன்றிய அரசின் செயலர்களை நியமிப்பது பிரதமரும் உள்துறை அமைச்சரும் அடங்கிய அமைச்சரவை நியமனக் குழு. ஆனால், கிராம ஊராட்சி அரசுகளின் செயலர்களை மட்டும் ஊராட்சிகள் நியமிக்க அதிகாரம் இல்லை என்பது எப்படி நியாயம்?
உள்ளாட்சிகளுக்கு அதிகாரமளிக்கும் 73-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் முக்கிய நோக்கமே சமூகநீதியும் பொருளாதார முன்னேற்றமும்தான். ஆனால், இவ்விரண்டையும் கேள்விக்குள்ளாக்குகிறது இச்சட்டத் திருத்தம். அதிகாரிகளை வைத்து, ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட அதே பாணிதான் இன்றும் தமிழ்நாட்டில் தொடர்கிறதா? திராவிட மாதிரி ஆட்சியென்பது மக்களுக்கான ஆட்சியா, அதிகாரிகளுக்கான ஆட்சியா என்ற கேள்விகளெல்லாம் மக்கள் மத்தியில் எழுகின்றன.
2022 பிப்ரவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றின் தலைவர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த பெண். அதே ஊராட்சியின் செயலர் அவரை டீ வாங்கி வரும் ஒரு வேலையாள்போல் நடத்தியிருக்கிறார். 2021 ஜூன் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றின் ஆதிதிராவிடத் தலைவரை, அவர் தன் வீட்டில் மாடு மேய்ப்பவர் என்பதால், ஊராட்சி அலுவலகத்தில் தனியாக பிளாஸ்டிக் நாற்காலி போட்டு ஊராட்சிச் செயலர் அமர வைத்திருக்கிறார்; அவரை அலுவலகம் வர விடாமல் அலுவலகத்தைப் பூட்டியதால் அந்த ஊராட்சிச் செயலரைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது. இது போன்ற பல அவலங்களைச் செய்திகளின்வழி கண்டுவருகிறோம். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒரே கோரிக்கை, ஒத்துழைப்பு வழங்காத ஊராட்சிச் செயலரை இடமாற்றம் செய்வது என்பதே. மேலும், விழுப்புரம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் தனக்கு பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டைக் காணவில்லை என்று வீடு கட்டிய ஆதாரத்தோடு கடந்த மே 1 கிராம சபைக்கு வந்து வடிவேலு பாணியில் முறையிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன் சிறப்பு அலுவலர் இருந்த காலத்தில், அதாவது வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஊராட்சிச் செயலர்களிடம் அனைத்து அதிகாரங்களும் இருந்த நேரத்தில்தான் ஊராட்சிகளில் அலுவலர்களின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தாண்டி ‘அரசு அலுவலர்கள்’ எனும் அதிகார வர்க்கமே தமிழ்நாட்டில் பெரும்பாலும் அதிகாரம் செலுத்திவருகிறது என்பது கண்கூடு. எளிய விளிம்புநிலை மக்களைச் சுரண்டும் இதுபோன்ற அதிகார வர்க்கத்துக்கு மேலும் அதிகாரத்தை வழங்குவதாகவும், திராவிட அரசு பேசும் சமூகநீதி, சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவல் ஆகிய அனைத்துக்கும் நேரெதிராகவும் உள்ளது இச்சட்டத் திருத்தம். மேலும், இச்சட்டத் திருத்தம் மூலம் சட்டரீதியாகவே ஊராட்சித் தலைவருக்கு மேல் அதிகாரமிக்க ஆளாகிறார், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஊராட்சிச் செயலர்.
சுயாட்சி அரசுகளான கிராம ஊராட்சிகள் (இந்திய அரசமைப்பு, கூறு 243G) அதன் செயலர்களை தாங்களே நியமிக்கும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அவர்கள் தவறு செய்தால் விசாரிக்க, தண்டிக்க இருக்கவே இருக்கிறது கிராம சபை. சமூகப் பிரச்சினைகள் அதிகம் நிலவும் நம் சமூகத்தில் அதிகாரத்தை அரசு தன்னிடம் குவிப்பதை விடுத்து, அவற்றைப் பரவலாக்கி, சமூக நல்லிணக்கத்துக்கான பிரச்சாரங்களை அரசே முன்னெடுப்பது, இவற்றை விவாதிக்கும் வகையில் கிராம சபைகளை அதிகாரப்படுத்த சட்டத் திருத்தம் கொண்டுவருவது போன்றவையே சிறந்த தீர்வாக இருக்க முடியும். எனவே, இச்சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
- வினோத் குமார், தன்னாட்சி உறுப்பினர். தொடர்புக்கு: vinoth.sar@gmail.com