Published : 08 May 2016 10:55 AM
Last Updated : 08 May 2016 10:55 AM

அப்பல்லாம் இப்படித்தான்! - எனக்காக பிரச்சாரத்தை ரத்து செய்த இந்திரா காந்தி: பழைய நினைவுகளில் பழ.நெடுமாறன்

1980 தேர்தலில் அதிமுக - கம்யூனிஸ்ட் கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் தமிழக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியிட்ட இப்போதைய தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தனது தேர்தல் அனுபவங்களை விவரிக்கிறார்.

‘‘அந்தத் தேர்தலில் என்னை எதிர்த்து அண்ணன் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை நிறுத்தியது திமுக. நாங்கள் இருவருமே பக்கத்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள். மூன்று தலைமுறைகளாக எங்கள் இருவரது குடும்பமும் நெருக்கமாக இருக்கிறோம். இருந்தாலும் தேர்தல் போட்டியிலிருந்து நாங்கள் இருவருமே விலக முடியாத இக்கட்டான சூழல். எங்கள் வீட்டுக்கு வந்த பி.டி.ஆர்., எனது தந்தையார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, ‘நீங்கள்தான் எனது வேட்புமனுவை முன்மொழிய வேண்டும்’ என்றார். கொஞ்சமும் யோசிக்காத எனது தந்தை, என்னிடமிருந்து பேனாவை வாங்கி, பி.டி.ஆரின் வேட்புமனுவில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

‘அண்ணே நீங்களும் உங்களோட வேட்புமனுவை பி.டி.ஆரோட அண்ணன் கமலை தியாகராஜனை முன்மொழியச் சொல்லுங்க’ன்னு எங்க கட்சிக்காரங்க சொன்னாங்க. அந்தமாதிரி ஏட்டிக்கி போட்டி வேலைய நான் செய்யமாட்டேன்னு சொல்லி மறுத்துட்டேன்.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். எனக்காகவும் வந்து பிரச்சாரம் செய்தார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிச்சு மதுரை ரேஸ் கோர்ஸ் திடலில் இந்திரா காந்தி பேசினார். எனது தொகுதியிலும் அவரது பிரச்சாரக் கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்தது. ஆனால், எனக்காகவே அந்தக் கூட்டத்தை இந்திரா காந்தி ரத்து செய்தார்.

தேர்தலில் எனக்கு மொத்தமே ரூ. 3 லட்சம் செலவாகி இருக்கும். அதில் 2 லட்சம் பொதுமக்களின் நன்கொடை. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் அப்போது எந்தக் கட்சியிலும் இல்லை. சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். வாக்கு வித்தியாசம் பத்தாயிரத்தை தொட்டதுமே எனக்கு போன் செய்த பி.டி.ஆர், ‘தம்பி.. உனக்கு நான்தான் முதல் மாலை போடுவேன்’ன்னு சொன்னார். அதுபடியே அவருக்கிட்டதான் முதல் மாலையை வாங்கிக்கொண்டேன்.

எங்கள் இரண்டு குடும்பங்களுக்கு மான உறவு இப்போதுவரை தொடர்கிறது. இப்போது, மாற்றுக் கட்சியினரை எதிரியாகவே பார்க்கும் அளவுக்கு பண்பாடு கெட்டுவிட்டது. தேர்தல் என்பது ஒரு ஜனநாயக சடங்கு என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாதவரை இது மாறுவதற்கு வாய்ப்பில்லை’’ என்றார் நெடுமாறன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x