

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 134 ஆண்டுகள் பழமை யான நெடுங்கல் அணையின் 3 மதகுகளும் சேதமடைந்து நீர் கசிந்து வருகிறது. இதனால் புதிய மதகுகள் அமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர், காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம் வழியாக நெடுங்கல்லை கடந்து செல்கிறது. இந்நிலையில் நெடுங்கல் கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிறிய அணை கட்டப்பட்டது. 1887 -1888-ல் கட்டப்பட்ட இந்த அணையின் நீளம் 912 அடி. அணையின் நீர் மட்டம் 8.97 அடி. அணை கட்டப்பட்டு 134 ஆண்டுகள் ஆகியும், தன் சுய அடையாளத்தை இழக்காமல் இன்னும் கம்பீரமாகவே காட்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வந்த உயர்ந்தபட்ச தண்ணீர் அளவு இங்குள்ள பாறையில் தேதி வாரியாக செதுக்கப்பட்டுள்ளது. அணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் பல ஆண்டுகள் கடந்த நிலையில், 4 மதகுகளும் சேதமாகி உள்ளன. குறிப்பாக 3 மதகுகளில் இரும்பு தகடுகள் உடைந்து நீர் கசிந்து வருகிறது. இதனை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ் ணகிரி அணை நீட்டிப்பு இடதுபுறக்கால்வாய் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறும்போது, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் நெடுங்கல் அணை உள்ளது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 'நெடுங்கல்' அணைக்கு வருகிறது. இங்குள்ள 2 பிரதானக் கால்வாய்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் பாரூர் ஏரிக்கும் தண்ணீர் செல்கிறது.
அணையில் உள்ள மதகுகளில் சேதம் ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் நீர் கசிந்து வருவதால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் உள்ளது. எனவே சேதமான மதகுகளை மாற்றி, புதிய மதகுகள் பொருத்த வேண்டும்.
இதேபோல், நெடுங்கல் ஏரி மற்றும் ஆவத்தவாடி ஊராட்சியில் உள்ள அச்சக்குட்டை ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உள்ள மதகுகள் முற்றிலும் சேதமாகி தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அலுவலர்களிடம் கேட்ட போது, நெடுங்கல் அணையில் உள்ள சேதமான மதகுகள் மாற்றிமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய மதகுகள் பொருத்தப்படும் ,என்றனர்.