

கடலூர் அருகே தனியார் கோழிப் பண்ணைகளில் மர்மமான முறையில் இறந்த கோழிகள்.
கடலூர்: ஒரு வாரத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்ததால் பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தியாகவல்லி, நொச்சிக்காடு, திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை, சித்திரைப்பேட்டை, ஆலப்பாக்கம், நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் வளர்ப்புக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து மர்மமான முறையில் கோழிகள் இறந்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துவிட்டதாக பண்ணை உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் முருகவேல், உதவி இயக்குநர் வேங்கடலட்சுமி ஆகியோர் பண்ணைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து உயிரிழந்த கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோய்த்தொற்று குறித்த பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோழிகளின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவும், நோய்த் தொற்று மற்ற பண்ணைகளுக்கு பரவுவதைத் தடுக்கவும் கால்நடை மருத்துவக் குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளனர். கோழிகளுக்கு அசாதாரணமான அறிகுறிகள் தென்பட்டாலோ, திடீர் உயிரிழப்பு ஏற்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 30-ம் தேதி முதல் நவ.2-ம் தேதி வரை கோழிப் பண்ணைகளில் சுமார் 6 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளன. பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நாமக்கல் கோழி ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் மற்றும் மாதவரத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
நாமக்கல் கோழி நோய் ஆராய்ச்சி கூட்டத்தின் அறிக்கையின்படி, வைரஸ் நோய் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவனத்தில் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளனவா என்பதை கண்டறிவதற்காக மாதவரத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தின் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறோம்” என தெரிவித்தனர்.