

கோப்புப் படம்
சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணிக்க தமிழக காவல்துறை புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை அவர்களின் குற்றத்தின் தன்மை மற்றும் ஆபத்தின் அடிப்படையில் 8 வண்ணங்களாக பிரித்து கண்காணிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுவாக கொடூர ரவுடிகள், கொலையாளிகள், கூலிப்படையினர் மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை போலீஸார் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக வகைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்கள் சிறையில் இருந்தாலும், ஜாமீனில் வெளியே இருந்தாலும் அல்லது திருந்தி வாழ்ந்தாலும் காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பார்கள்.
அதேபோன்று, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தனித்தனி வண்ணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி, கண்காணிப்பில் வைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சிவப்பு: கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மிகக் கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
ஆரஞ்சு: பெண்களை தொடர்ந்து பின்தொடர்தல், பாலியல் தொல்லை அளித்தல். சிறார்களுக்கு எதிரான குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்வோர்.
நீலம்: இணையவழி மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள்.
ஊதா: மூன்றாம் பாலினத்தவர், டேட்டிங் செயலிகள் மற்றும் இணைய தளங்களை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்.
கருப்பு: பெண்கள், சிறார்களை கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்களை அமைப்புசார்ந்த முறையில் மேற்கொள்ளும் கும்பல்களை சேர்ந்தவர்கள்.
சில்வர்: சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அல்லது குற்றப்பின்னணி கொண்ட சிறார்களை அடையாளம் கண்டு, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தும் நடைமுறை.
மஞ்சள் மற்றும் பச்சை: குற்றவாளிகளின் முந்தைய குற்றப் பதிவுகள், அவர்கள் சமூகத்துக்கு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல், ஆபத்துகளின் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் அபாய நிலையை குறிக்கும் வண்ணங்களாக இந்த இரண்டும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த புதிய நடைமுறை மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.