

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு எல்லாத் துறைகளிலுமே வந்துவிட்டது. மளிகைக்கடையில் துண்டுச்சீட்டில் எழுதி பில் போட்டுக்கொண்டிருந்த அண்ணாச்சி, இன்று கம்ப்யூட்டரில் பொருளை ஸ்கேன்செய்து பில் தருகிறார். ரயில் டிக்கெட்டில் இருந்து சினிமா டிக்கெட்வரை அனைத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்து வாங்கிவிட முடிகிறது.
இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களிலும் அங்கம் வகிக்கிற டிஜிட்டல் தொழில்நுட்பம் மானுடவியல் படிப்பையும் எளிமைப்படுத்திவிட்டது. இந்நிலையில் டிஜிட்டல் ஹியூமானிட்டீஸ் (Digital Humanities) என்கிற துறை அபரிமிதமாக வளர்ந்துவருகிறது. இந்தத் துறை கணினி அறிவியலையும் மானுடவியலையும் இணைக்கிறது.
துறையின் சிறப்பு: மானுடவியல் துறையின் அங்கங் களான வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை ஆகியவற்றைக் கணினியில் நிரல்படுத்தி இயங்கும் இந்தத் துறையின் மீது உலகின் கவனம் தீவிரமடைந்திருக்கிறது. கிட்டத் தட்ட 50 ஆண்டுகளாக இந்தத் துறை செயல்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் முக்கியக் கல்வி நிறுவனங்கள் இந்தத் துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன.
தொல்லியல் சின்னங்களை ஆய்வு செய்யும்போது அங்கே வாழ்ந்த மனிதர்கள், அவர்களின் இயல்புகள், பயன்படுத்தப்பட்ட புழங்குபொருள்கள், பண்பாடு அனைத்தையும் டிஜிட்டல் ஹியூமானிட்டீஸ் மூலம் எளிதாகவும் துல்லியமாகவும் அனுமானிக்க முடியும்.
எடுத்துக்காட்டுக்கு, கீழடியை எடுத்துக் கொண்டால், அதன் காலம் தொடங்கி ஊரின் வடிவமைப்புவரை இந்தத்துறை நிபுணர்கள் வரலாற்றுக்கு நெருக்க மாகத் தகவல்களைத் திரட்டித் தருவார்கள். அதேபோல ஒரு பழங்காலச் சித்திரம் சிதை வடைந்து அழியும் நிலையில், டிஜிட்டல் ஹியூமானிட்டீஸ் மூலம் அதன் தன்மை மாறாமல் மீட்டெடுக்க முடியும்.
வரலாறு, இலக்கியம் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கணினித்தொழில்நுட்பங்களையும் மென்பொருள் களையும் பயன்படுத்துவதே இந்தத் துறையின் நோக்கம்.
உதாரணமாக, ‘ஒரு குறிப்பிட்ட நாடகத்தை எழுதியவர் யார்?’ என்பதைக் கண்டறிவது அல்லது ‘கடந்த 200 ஆண்டுகளில் 'சுதந்திரம்' என்கிற வார்த்தையின் பயன்பாடு எப்படி மாறியிருக்கிறது’ என்பதை ஆராய்வது, பழமையான நூல்களைப் பாதுகாப்பது, டிஜிட்டல் மயப்படுத்துவது என இந்தத் துறையின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துவருகிறது.
பழமையும் புதுமையும்: இன்றைய அவசர உலகத்தில் ஒரு துறை சார்ந்த ஆயிரக் கணக்கான நூல்களைப் படிப்பது சாத்தியமல்ல. டிஜிட்டல் ஹியூ
மானிட்டீஸ் எல்லா நூல்களையும் பகுத்து உங்களுக்குத் தேவையான வற்றைப் பிரித்துத் தந்துவிடும். தொல்லி யல் சின்னங்களின் வரைபடங்கள், நில வரைபடங்கள், கால வரிசைகளை உருவாக்குவதற்கும் இந்தத் துறை பயன்படும்.
அருஞ்சொற்பொருள் உருவாக்கம், அகராதித் தொகுப்புப் பணிகளையும் இந்தத் துறை எளிமைப்படுத்தும். எடுத்துக் காட்டுக்கு ஒன்றைப் பார்ப்போம். அமெரிக்க வரலாறு குறித்துச் சில கட்டுரைகளை எழுதியவர் அலெக்சாண்டர் ஹாமில்டனா அல்லது ஜேம்ஸ் மேடிசனா என்கிற குழப்பம் இருந்தது.
இருவரின் எழுத்து நடையையும் கணினி மூலம் டிஜிட்டல் ஹியூமானிட்டீஸ் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு, அதில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு ஜேம்ஸ் மேடிசன்தான், அவற்றை எழுதினார் என்பதை உறுதிப் படுத்தினர். சோழர்களின் வணிகப்பாதை, கண்ணகி யின் பயணம் குறித்தெல்லாம் இந்தத் துறை நிபுணர்கள் ஆதாரபூர்வ மாகத் தரவுகளை உருவாக்க முடியும்.
இந்தத் துறை நிபுணர்களால் உருவாக் கப்பட்ட ஆர்பிஸ் (ORBIS) நில வரைபடம் பண்டைய ரோமானியப் பேரரசின் ‘கூகுள் மேப்ஸ்’ போன்றது. பொ.ஆ. (கி.பி.) 200இல் ரோமானியப் பேரரசில் பயணம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும். எவ்வளவு செலவாகும் என்பதை இது துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டுகிறது. இது ரோமானியப் பொருளாதாரத்தைப் பற்றிய நமது புரிதலையே மாற்றியது.
அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நடந்த 36,000 அடிமை வர்த்தகப் பயணங்களைப் (ஸ்லேவ் வாயேஜஸ் (Slave Voyages) பற்றிய தரவுகளை இது தொகுத்துள்ளது. இது அடிமைத் தனத்தின் கொடுமை யையும் அதன் அளவையும் தரவுகள் மூலம் உலகிற்கு உணர்த்துகிறது.
சேதமடைந்த வரலாற்றுச் சின்னங்களை இந்தத் துறையின் மூலம் 3D வடிவில் பாதுகாக்க முடியும். ஹார்வர்டு பல்கலைக்கழகம் எகிப்தில் உள்ள கீஸா பிரமிடு களை 3D வடிவில் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நாம் வீட்டிலிருந்தபடியே அந்தப் பிரமிடுகளுக்குள் சுற்றிப் பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பெறலாம்
ஏன் முக்கியமானது? - வேகம் (Scale): மனிதர்கள் ஒரு புத்தகத் தைப் படிக்கும் நேரத்தில் கணினியால் 10,000 புத்தகங்களை ஆய்வுசெய்ய முடியும்; அணுகல் (Access): உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அரிய நூலகக் குறிப்புகளை இணையம் வழியாகப் படிக்க முடியும்; பாதுகாப்பு (Preservation): போர் அல்லது இயற்கைச் சீற்றங்களால் அழியக்கூடிய வரலாற்றுச் சின்னங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்க முடியும்.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் டிஜிட்டல் ஹியூமானிட்டீஸ் சார்ந்த படிப்புகள் உள்ளன. இந்தியாவில் இந்தூர் ஐ.ஐ.டி.யில் ஒரு தாளாக மட்டுமே இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. அடுத்த நூறாண்டுகளுக்கு உலகை ஆளப்போகும் இந்தப் படிப்பை இந்தியாவில் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் குறைந்தபட்சம் முதுநிலைப் படிப்பாக வாவது கொண்டுவரப்பட வேண்டும்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org