மதுரையில் பிளக்ஸ் போர்டுகள் அகற்றியதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்

மதுரையில் பிளக்ஸ் போர்டுகள் அகற்றியதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்
Updated on
1 min read

மதுரை: பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றியதைக் கண்டித்து அழகர்கோயில் சாலையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை அழகர்கோயில் சாலையில் தனியார் ஹோட்டலில் நடந்தது. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களின் வருகையொட்டி அழகர்கோயில் ரோடு, கோகு லே ரோட்டில் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் புகைப்படங்களுடன் மெகா பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில், இந்த போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அழகர்கோயில் சாலையில் சமூக அறிவியல் கல்லூரியின் வாசல் பகுதி முதல் காவல் ஆணையர் அலுவலகம் வரை வைக்கப்பட்டிருந்த சில போர்டுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிலபோர்டுகளை மாநகராட்சி அலுவலர்கள், போலீஸார் அகற்றி பின்பக்கமாக திருப்பி வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதற்கு பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகர மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தனியார் ஹோட்டல் அருகே மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் சுரேஷ் குமார், மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "ஆளுங்கட்சி அமைச்சர்கள் தூண்டுதலில் வைக்கப்பட்டு பிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கூடாது, பாஜக பிளக்ஸ் போர்டுகளை அகற்றினால் பிற கட்சிகள் வைத்திருக்கும் பிளக்ஸ் போர்டுகளையும் உடனே அகற்ற வேண்டும்" என பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளும் கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், அந்த சாலையில் ஒரு சில பிளக்ஸ் போர்டு மட்டும் அகற்றப்பட்டது. கூட்டம் முடிந்தபின், எஞ்சிய பிளக்ஸ் போர்டுகளை அகற்றவேண்டும் என பாஜகவினருக்கு போலீஸார் அறிவுறுத்தினர். மறியல் சம்பவத்தால் அழகர்கோயில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in