

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் ஆறு பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் தின் மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டி யிட்டார். தேர்தல் முடிவுகள் தெரிந் திருந்தும் குறைந்தபட்சம் டெபாசிட் டையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ப.சிதம்பரமும் அவ ரது மகனும் கடுமையாக உழைத் தனர். ஆனாலும், டெபாசிட்டை தக்கவைக்க முடியவில்லை.
இப்படியொரு தோல்வியை எதிர்பார்க்காத சிதம்பரம், காங்கிரஸ் பொறுப்பாளர்களை அழைத்து வாக்குகள் குறைந்தது ஏன் என புள்ளிவிவரக் கணக்கு கேட்டார். அப்போது, சில பொறுப்பாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் வார்த்தைகளில் கடுமை காட்டியதாகவும் சொல்லப்படு கிறது.
இந்நிலையில், 5-ம் தேதி மாவட்ட கமிட்டி கூட்டம் சிவகங் கையில் நடந்தது. கூட்டத்துக்கு இடையில் அங்கு வந்த காளையார்கோவில் வட்டாரத் தலைவர் சந்தியாகு, ‘நானும் பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவன்தான் என்பதை கார்த்தி யிடம் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து வட்டாரத் தலைவர்கள் சிவகங்கை தெற்கு உடையார், வடக்கு சோணை, இளையான்குடி நாகராஜன், திருப்புவனம் ஜெயச்சந்திரன் உள்ளிட்டவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் சிலரும் ராஜினாமா செய்யக்கூடும் என்று சொல்லப்படும் நிலையில் ராஜினாமாவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
தேர்தலின்போது சிவகங்கை தொகுதியில் உள்ள வட்டார, நகரங் களில் கட்சி அலுவலகம் கட்டிடம் பிடிக்க அட்வான்ஸ் தொகையாக சிதம்பரம் அலுவலகத்திலிருந்து முப்பதாயிரம் வரை பணம் கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு சிலர் அலுவலகம் திறந் தனர். பலர் அமைதியாகிவிட்டனர். இதையெல்லாம் தெரிந்து கொண்ட கார்த்தி, ‘கட்சி அலுவலகத்துக்காக செலவழித்த பணம் போக மீதியை திருப்பிக் கொடுங்கள்’ என தலைவர்களுக்கு கட்டளை இட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வட்டாரத் தலைவர் ஒருவர், ‘‘கடந்த பல ஆண்டுகளாக இவர்க ளுக்காக ஃபிளெக்ஸ் வைக்கவும் போஸ்டர் ஒட்டவும் நாங்கள் செல வழித்த லட்சங்களை யார் திருப்பித் தருவது?’’ என்று கேள்வி எழுப்பினார்.
ராஜினாமா குறித்து சிவகங்கை வடக்கு வட்டாரத் தலைவர் சோணையிடம் கேட்டதற்கு, ‘‘மூன்று மாதங்களுக்கு முன்பே நான் ராஜினாமா செய்வதாக தலைவர் சிதம்பரத்திடம் சொன் னேன். அவர்தான் பொறுத்திருக்கச் சொன்னார். இப்போது தேர்தலில் வாக்கு குறைந்ததற்கு பொறுப் பேற்று மனப்பூர்வமாக ராஜினாமா செய்திருக்கிறேன்’’ என்றார்.
மாவட்டத் தலைவர் சத்திய மூர்த்தியோ, ‘‘கொடுத்த பணத்தை யாரிடமும் திருப்பிக் கேட்க வில்லை. அலுவலகங்களைத்தான் காலி செய்யச் சொன்னோம். வட்டார, நகரத் தலைவர்களை மாற்ற வேண்டும் என்பது ஏற்கெனவே எடுத்த முடிவுதான். இதுவரை ஆறு பேர் என்னிடம் ராஜினாமா கடிதம் கொடுத்திருக் கிறார்கள் என்றாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை’’ என்றார்.