Published : 08 May 2022 04:44 AM
Last Updated : 08 May 2022 04:44 AM

தகைசால் பள்ளிகள் முதல் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வரை - ஓராண்டு நிறைவை முன்னிட்டு அரசின் 5 முக்கிய திட்டங்கள்

சென்னை மாநகர பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பயணம் செய்து, ஓராண்டு கால ஆட்சியைப் பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார். (அடுத்த படம்) ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி சட்டப்பேரவையில் நேற்று அரசின் சாதனைகளை விளக்கி 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: தமிழக அரசின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருத்துவ பரிசோதனை, தகைசால் பள்ளிகள் திட்டம், நகர்ப்புற மருத்துவ நிலையம் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கடந்தாண்டு மே 7-ம் தேதி பொறுப்பேற்று, ஓராண்டு நேற்றுடன் நிறைவுபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று காலை 8.35 மணிக்கு இல்லத்தில் இருந்து, கோபாலபுரம் சென்ற முதல்வர், அங்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், தாயார் தயாளு அம்மையாரிடம் ஆசி பெற்றார். அதன்பின், கருணாநிதி நினைவிடம் வரும் வழியில், ராதாகிருஷ்ணன் சாலையில் வந்து கொண்டிருந்த தடம் எண் 29சி மாநகர பேருந்தில் ஏறி, பெண் பயணிகள் உள்ளிட்ட பயணிகளிடம் ஆட்சி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார்.

அதன்பின் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு, தலைமைச்செயலகம் சென்றார். அங்கு, ‘ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைகோடி தமிழனின் கனவுகளைத் தாங்கி’ என்ற காலப்பேழை புத்தகம் மற்றும் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு- நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்’ என்ற சாதனை மலரையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தொடர்ந்து பேரவைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், 110-வது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது; எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது. அதைக் காப்பாற்ற உழைத்தாக வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். நான் மட்டுமல்ல; இந்த அமைச்சரவையே இன்னும் அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறது.

புதிய அறிவிப்புகள்

ஓராண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டு தொடங்கும் இந்நாளில் மக்கள் மனம் மகிழும் மிக முக்கியமான 5 பெருந்திட்டங்களை அறிவிக்கிறேன்.

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகரம் மற்றும் கிராமங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் காலையில் சீக்கிரமாக புறப்பட்டு விடுவதால், காலை உணவு சாப்பிடுவதில்லை. பள்ளிகள் மிக தூரம், குடும்பச் சூழலும் இதற்கு காரணமாகிறது. முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* ஆட்சிக்கு வந்த பின் கிடைத்த புள்ளி விவரத்தில், தமிழகத்தில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். எனவே 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்க, பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

* மூன்றாவது ‘தகைசால் பள்ளிகள்’ என்ற திட்டம் (Schools of Excellence). ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற நான், அந்த அரசால் நடத்தப்படும் மாதிரிப்பள்ளியை பார்வையிட்டேன். இதேபோல் தமிழகத்திலும் உருவாக்கப்படும் என்று சொல்லியிருந்தேன். அதன்படி, அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். முதல்கட்டமாக ரூ.150 கோடியில், 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

இப்பள்ளிகளின் கட்டிடங்கள் நவீன மயமாக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன் கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு, கைவினைச் செயல்பாடுகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு அந்தப் பள்ளியில் உருவாக்கப்படும். மாணவர்களின் பல்வகைத் திறன்களையும் வெளிக்கொண்டு வருவோம். படிப்புடன் சேர்ந்து அவர்களது தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப் படும். படிப்படியாக திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* நான்காவது நகர்ப்புற மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரம், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப்போல், நகர்ப்புறங்களில் இந்த மருத்துவ நிலையங்கள் அமைய இருக்கின்றன. ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும். இவற்றுக்கு ரூ.180.45 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும். இவற்றில் காலை 8 முதல் 11 மணி, மாலை 4 முதல் 8 மணி வரை புறநோயாளிகள் சேவை வழங்கப்படும். இங்கு ஒரு மருத்துவர், செவிலியர், ஒரு மருந்தாளுநர், ஒரு உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்படுவர். இதன்மூலம் வரும், 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழகம் எட்டும்.

* ஐந்தாவது, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட விரிவாக்கம். இந்த திட்டம் மக்களுக்கு பெரும் பயனை தந்துள்ளதால், இது மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வருகிறது. 234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலிப்பார்கள்.

அடுத்து வரும் ஆண்டுகளில் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், மாவட்ட ஆட்சியர்களிடம் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அளித்தால், அதில் உள்ள முக்கிய திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செய்ய இயலாமல் இருந்தால், அவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். இப்பணிகளுக்காக ரூ.1,000 கோடி இந்தாண்டுக்கு நிதி ஒதுக்கப்படும். இத்திட்டம் நேரடியாக என் கண்காணிப்பில் நடைபெறும்.

எனது கொளத்தூர், எதிர்க்கட்சித் தலைவரின் எடப்பாடி, துணைத் தலைவரின் போடி தொகுதியாக இருந்தாலும், அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக திட்டங்கள் தீட்டப்படும்.

தேர்தலுக்கு முன், திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், 7 முக்கியமான வாக்குறுதிகளை நான் பிரகடனப்படுத்தினேன். அவற்றை மையமாக கொண்டு 5 திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன. நான் கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் இந்த அறிவிப்புகளை அதிமுக தவிர மற்ற அனைத்து சட்டப்பேரவை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்றனர்.

முன்னதாக திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, அமைச்சர்கள் அனைவரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், பொன்னாடை மற்றும் புத்தகங்களை வழங்கினர். அதேபோல், உதயநிதி ஸ்டாலின் வந்தபோது, அவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், நேற்றைய பேரவை நிகழ்ச்சிகளை எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் மேல் மாடத்தில் இருந்து பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x