Last Updated : 07 May, 2022 12:37 AM

 

Published : 07 May 2022 12:37 AM
Last Updated : 07 May 2022 12:37 AM

மதுரை | விதிமீறலால் 4 வழிச்சாலையில் அதிகரிக்கும் கால்நடை உயிரிழப்புகள்: தடுக்குமா ரோந்து காவல்துறை?

மதுரை: மதுரை நான்கு வழிச்சாலையில் விதிமீறலால் கால்நடைகள் விபத்துக்கள் அதிகமாகி வருவதை தடுக்கும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் இருந்து திருச்சி, நெல்லை, தேனி, திண்டுக்கல்லுக்கு நான்கு வழிச்சாலைகள் செல்கின்றன. ஒவ்வொரு நாளும் இச்சாலைகளில் பேருந்துகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் இருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதிக்கு கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகமாக செல்லுவதால் மதுரை - கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிற சாலைகளைவிட அதிகமான வாகன போக்குவரத்து உள்ளது. அடுத்த நிலையில் மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையிலும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகரித்துள்ளன. கரோனா நேரத்தில் குறைந்து இருந்த வாகன போக்குவரத்து, தற்போது கூடியுள்ளன. அதே நேரத்தில் விபத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே விபத்துக்களை தடுக்க, சில முன்எச்சரிக்கை நடவடிக்கை இருந்தாலும், போக்குவரத்து விதிமீறல், குறுக்கே சாலை கடப்பது, சாலையின் நடுவிலுள்ள இடைவெளியிலுள்ள அரளி செடிகளுக்கு அடியில் வளர்ந்துள்ள புற்களை மேய்வதற்கு செல்லும் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளாலும் விபத்துகள் அதிகரித்துள்ளன. மே 4ம் தேதி மாலை மதுரையில் இருந்து சென்னைக்கு மின்வாரிய பெண் பொறியாளர் சர்மிளா (35) என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் காரில் சென்றபோது, மேலூர் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி என்ற இடத்தில் சாலையின் நடுவில் வளர்ந்த புல்லை மேயச் சென்ற மாடு ஒன்று குறுக்கே சென்றதால் ஓட்டுநர் பிரேக் போட்டு கார் கவிழ்ந்ததில் பெண் பொறியாளர், அவரது ஒரு வயது மகள் உயிரிழந்தனர். அவரது மற்றொரு மகளும், காரை ஓட்டிய சகோதரரும் காயமடைந்தனர்.

இது போன்ற விபத்து எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் அடிக்கடி நடப்பதை தவிர்க்க முடியவில்லை. விபத்துக்களை தடுக்க, நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் பணியில் இருந்தாலும், அதிக விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து எச்சரிக்கை விழிப்புணர்வு போர்டுகளை வைக்கவேண்டும். கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, சம்பந்தப்பட்ட ஆடு, மாடுகளின் உரிமையாளர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் அபராதம் வசூலித்தல், வழக்கு பதிவு செய்தால் நான்கு வழிச்சாலை விபத்துக்களை குறைக்கலாம் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறியது: ”நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் ஹாரன் சத்தத்தை அதிகரிக்க, நடுவில் அரளி செடிகள் நடுவதாக கூறுகின்றனர். அதற்கு அடியில் வளரும் புற்களை மேய்வதற்கு ஆடு, மாடுகள் செல்கின்றன. சாலைகளின் குறுக்கே எதுவும் வராது என்பதால் வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது, திடீரென கால்நடைகள் குறுக்கிட்டால் விபத்து நடக்கிறது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கிடை மாடுகளை சாலையோரங்களில் மேய விடுவதாலும், விபத்து நேரிடுகிறது.

அணுகு சாலை சந்திப்பு இடங்களில் வாகன விதியை மீறி எதிர்திசையில் வருவது போன்ற விதிமீறலால் நான்கு வழிச்சாலையில் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட தூரம் வரை நெடுஞ்சாலை ரோந்து படை செயல்பட்டாலும், நெடுஞ்சாலையில் ஆடு, மாடுகள் குறுக்கிடுவதை கண்டுகொள்வதில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை, அதன்கீழ் செயல்படும் 'நகாய்'(NHAI) நிர்வாகமும் விபத்துகளை முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி விபத்து நேரிடும் இடங்களை கண்டறிந்து, விழிப்புணர்வு போர்டு வைக்கவேண்டும்.

கால்நடைகளை அவிழ்த்து விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என, உரிமையாளர்களை அடையாளம் கண்டு எச்சரிக்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு போர்டுகளை முக்கிய இடங்களில் வைக்கவேண்டும். குற்றச்செயல், விபத்துக்களை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்படும் என்ற உத்தரவை தீவிரப்படுத்த வேண்டும். விபத்து குறித்து குறும்படங்ளை வெளியிடவேண்டும்” என்றார்.

நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் கூறுகையில், ''குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு. எங்களுக்குரிய இடங்களில் விபத்துக்களை தடுக்க, நடவடிக்கை எடுக்கிறோம். சாலையோரங்களில் தேவையின்றி வாகனங்களை நிறுத்தாமல், அதற்கென ஒதுக்கிய இடங்களில் மட்டுமே நிறுத்த நடவடிக்கை எடுக்கிறோம். மேலூர், கொட்டாம்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலைகளில் பெரும்பாலும் கோயில்களுக்கு நேர்ந்துவிடும் காளைகளே சாலைகளுக்கு அதிகமாக வருகின்றன. எதுவனாலும் நான்கு வழிச் சாலைகளில் விபத்து, குற்றச்செயல்களை தடுக்க உரிய கவனம் செலுத்தப்படும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x