நெல்லை | சாலையோர மரத்தை அகற்றும்போது உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு

நெல்லை | சாலையோர மரத்தை அகற்றும்போது உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரத்தை அகற்றும்போது மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து, தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் மாநில நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று பறையன்குளம் கிராமம் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மரத்தை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ ரிக்‌ஷா மீது, மரம் சாய்ந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே ஆட்டோ ரிக்‌ஷாவை ஓட்டி வந்த பத்தமடையைச் சேர்ந்த காதர் மொய்தீன் மற்றும் அதில் பயணம் செய்த ரஹமத் பீவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர் காதர் மொய்தீனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் காயமுற்று, தற்போது சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று, இச்சம்பவத்தில் உயிரிழந்த காதர் மொய்தீன் மற்றும் ரஹமத் பீவி குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்சம் ரூபாயும், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் விபத்து இழப்பீடாக தலா ஐந்து லட்சம் ரூபாயும், ஆகமொத்தம் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாயும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஐம்பதாயிரம் ரூபாயும் என தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதிசெய்து, இதுபோன்ற விபத்துக்கள் மேலும் நடக்காத வண்ணம் கவனமுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அனைத்து துறைகளுக்கும் முதல் அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in