அதிமுக - புதிய தமிழகம் நேரடி போட்டி: ஒட்டப்பிடாரத்தை தக்கவைப்பாரா கிருஷ்ணசாமி?

அதிமுக - புதிய தமிழகம் நேரடி போட்டி: ஒட்டப்பிடாரத்தை தக்கவைப்பாரா கிருஷ்ணசாமி?
Updated on
1 min read

ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக- புதிய தமிழகம் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி இத்தொகுதியை தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரே தனித்தொகுதி ஒட்டப்பிடாரம். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஆர். சுந்தரராஜ் போட்டியிடுகிறார். புதுமுக வேட்பாளர். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக இருந்தவர் என்பதால் தொகுதி மக்களுக்கு ஓரளவுக்கு பரிச்சயமானவர்.

சாதக-பாதகம்

கடந்த 3 தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியே இத்தொகுதியில் வென்றுள்ளன. இந்த தொகுதியில் அதிமுகவுக்கு என உள்ள வலுவான வாக்குவங்கி, ஆளும் கட்சி பலம், புதுமுக வேட்பாளராக இருப்பதால் எந்தப் புகாருக்கும் ஆளாகாதவர் என்பன போன்றவை சுந்தரராஜ்க்கு வலு சேர்க்கின்றன.

அதேவேளையில் எதிர்த்து நிற்கும் கிருஷ்ணசாமி விஐபி அந்தஸ்து பெற்ற வேட்பாளர் என்பது இவருக்கு சவாலான விசயமாக அமைந்துள்ளது. மேலும், கடந்த 3 முறையாக அதிமுக மற்றும் கூட்டணி வசமே இந்த தொகுதி இருந்தபோதிலும் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்ற மக்களின் குற்றச்சாட்டு பாதகமான விசயமாக பார்க்கப்படுகிறது.

அணி மாறி போட்டி

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, ஏற்கெனவே இத்தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக வெற்றி பெற தீவிரமாக முயன்று வருகிறார்.

திமுக கூட்டணி அவருக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை வெள்ளத்தால் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனைவருக்கும் நிவாரண உதவி வாங்கி கொடுத்தது போன்றவை கிருஷ்ணசாமிக்கு கைகொடுக்கும் அம்சங்கள்.

அதே நேரத்தில் தொகுதி பக்கம் தலை காட்டாதவர். வெற்றி பெற்றால் சந்திக்க முடியாதவர் என்பன போன்ற மக்களின் குற்றச்சாட்டுகள் அவருக்கு சவாலான அம்சங்கள்.

ஈடுகொடுக்க முடியுமா?

தேமுதிக- தமாகா- மக்கள் நலக்கூட்டணி சார்பில் தேமுதிகவின் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆறுமுக நயினார் களம் இறங்கியுள்ளார்.

அவரை ஆதரித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரம் செய்தது, வலுவான கூட்டணி போன்றவை பலமாக உள்ளது. இருப்பினும் அதிமுக- புதிய தமிழகம் இடையே நிலவும் கடுமையான போட்டிக்கு மத்தியில் இவரால் ஈடுகொடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வெற்றி யாருக்கு?

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அதிமுகவின் ஆர். சுந்தரராஜ், புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதில் வெற்றிவாகை சூடப் போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in