Published : 05 May 2016 09:05 AM
Last Updated : 05 May 2016 09:05 AM

அப்பல்லாம் இப்படித்தான்! - அப்ப தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்கிறதே கஷ்டம்: பொன்.முத்துராமலிங்கத்தின் தேர்தல் நினைவுகள்

1973 திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் - அதிமுகவுக்கு முதல் வெற்றியைத் தந்த இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் பொன்.முத்துராம லிங்கம் (முன்னாள் அமைச்சர்). 1980-ல் மதுரை மேற்கு தொகுதியில் எம்.ஜி.ஆரை எதிர்த்தும் களம் கண்ட இவர் தனது தேர்தல் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

அதிமுக தொடங்கி ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல். அப்போது ஜாதி - மதம், நில உடைமை ஆதிக்கம், ஆள் பலம், எம்.ஜி.ஆர். மீது பாமர மக்கள் வைத்திருந்த பற்று இதையெல்லாம் எதிர்த்து களத்தில் கடுமையாக போராட வேண்டி இருந்தது. சென்ற இடமெல்லாம் ‘எம்.ஜி.ஆரை ஏன் கட்சியிலிருந்து விலக்கினீர்கள்?’ என்றுதான் கேட்டார்கள். பல இடங்களில் அடிதடிகளும் நடந்ததால் இருபது முப்பது பேரைச் சேர்த்துக்கொண்டு வாக்குச் சேகரிக்க வேண்டிய நிலை.

வீட்டிலிருந்து போகும்போதே பத்திருபது பேருக்கும் சாப்பாடு தயாராகிவிடும். பசித்தால் எங்காவது ஒரு புளிய மரத்தடியில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிடு வோம். எங்களுக்கான செலவு களுக்கு மட்டுமே நாங்கள் பணம் செலவழித்தோம். மற்ற செலவுகளை அந்தந்த கிளைப் பொறுப்பாளர்களே கவனித்துக்கொண்டார்கள்.

மதுரை மேற்கில் எம்.ஜி.ஆரை எதிர்த்து நின்றபோது, வீடு வீடாகப் போய் ஓட்டுக் கேட்டேன். தனது அரசு கலைக்கப்பட்டதற்கு நியாயம் கேட்ட எம்.ஜி.ஆர். என்னைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எங்கள் வீடு இருக்கும் பகுதியில் வாக்குக் கேட்பதைக்கூட நாகரிகமாக தவிர்த்தார்.

அந்தக் காலத்தில் தேர்தலில் போட்டியிட ஆள் சிக்குவதே அரிது. ஒரு தேர்தலில் போடி தொகுதிக்கு சுருளி என்பவரை வேட்பாளராக கூட்டிட்டுப் போயிருந்தேன். பிளாட்ஃபாரத்துல 5 ரூபாய்க்கு விற்கும் சட்டையை மாட்டிக்கொண்டு வந்திருந்த சுருளியைப் பார்த்துவிட்டு, ‘ஏம்பா, வேற ஆளு கிடைக்கலையா?’ன்னு பேராசிரியர் கேட்டார். அண்ணே சத்தமா பேசாதீங்க.. அந்தாளு காதுல விழுந்தா அவனும் ஓடிப் போயிருவான்; அப்புறம் ஆள் பிடிக்கிறது கஷ் டம்’னு சொன்னேன்.

இன்னொரு தடவ, மேலூர்ல பூக்கடை வைச்சிருந்த சின்னக்கண்ணுவை கூட்டிட்டுப் போயிருந்தேன். அவருக்கிட்ட ‘நீ என்ன ஜாதி?’ன்னு பேராசிரியர் கேட்டார். ‘ஆண்டிப்பண்டாரம்’னு அவரு சொன்னதும், ‘எவ்வளவு செலவு செய்வே?’ன்னு அடுத்த கேள்வியைக் கேட்டார். அப்ப தலைவரு, ‘ஏங்க.. அவரே ஆண்டிப்பண்டாரம்னு சொல்றாரு அவருக்கிட்ட போயி செலவு கணக்குக் கேக்குறீங்க?’ என்று நகைச்சுவையாக கேட்டது இன்னமும் ஞாபகம் இருக்கு.

அப்ப நடந்த தேர்தல்களையும் இப்ப தேர்தல் நடக்கும் முறைகளையும் ஒப்பிடுவதே அபத்தம். அப்ப இருந்த தேர்தலுக்கான நோக்கங்கள் இப்ப இல்லாமல் போனதுதான் அனைத்து அவலங்களுக்கும் காரணம்’’ என ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார் பொன்.முத்துராமலிங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x