கிருஷ்ணகிரியில் உதிர்ந்த மாங்காய்கள் கிலோ ரூ.5-க்கு கொள்முதல்: விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி அருகே கொடுகூர் கிராமத்தில் சூறைக்காற்று, ஆலங்கட்டியுடன் பெய்த மழைக்கு உதிர்ந்த  மாங்காய்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. படம்: எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி அருகே கொடுகூர் கிராமத்தில் சூறைக்காற்று, ஆலங்கட்டியுடன் பெய்த மழைக்கு உதிர்ந்த மாங்காய்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. படம்: எஸ்.கே.ரமேஷ்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்குஉதிர்ந்த மாங்காய்கள் கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் டன் கணக்கில் உதிர்ந்துள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி அருகே மோரனஅள்ளி, கொடுகூர், சோக்காடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 டன்னுக்கு மேல் மாங்காய்கள் உதிர்ந்தன. தோட்டத்தில் உதிர்ந்த மாங்காய்கள் கூலி ஆட்கள் மூலம் சேகரித்து, மண்டிகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். உதிர்ந்த மாங்காய்கள் கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், போக்குவரத்து கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கொடுகூர் விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் ஆறு மற்றும் கிணறு பாசனம் மூலம் மா விளைச்சல் ஓரளவுக்கு உள்ளது. ஆனால் தற்போது ஆலங்கட்டி, சூறைக் காற்றுடன் பெய்து வரும் மழைக்கு டன் கணக்கில் மாங்காய்கள் உதிர்ந்து கீழே விழுந்து சேதமாகிறது.

அறுவடை செய்யும் மாங்காய்கள், டன் ரூ.14 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்கின்றனர். மழைக்கு உதிர்ந்தமாங்காய்கள் டன் ரூ.5 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்கின்றனர். கிலோவுக்கு ரூ.5 தான் கிடைக்கிறது. அதுவும் பெங்களூரா ரக மாங்காய்கள் தவிர மழைக்கு உதிர்ந்த பிற ரக மாங்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை.

இதனால் பராமரிப்பு செலவு மற்றும், மண்டிகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு கூட கிடைக்கவில்லை. வருவாய் கிடைக்காவிட்டாலும், செலவு தொகையாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இழந்து வருகிறோம்.

எனவே, தமிழக அரசு நெல், கரும்புக்கு கொள்முதல் நிலையம் அமைப்பது போல், கிருஷ்ணகிரியில் மாங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in