

கிருஷ்ணகிரி: தொடர் வருவாய் இழப்பை சந்தித்த நிலையில், தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக காவேரிபட்டணம், சூளகிரி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை, மலைச்சந்து, ஓசூர், ராயக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் தக்காளி ராயக்கோட்டை தக்காளி சந்தை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. மேலும், பல வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து தக்காளியை அறுவடையும் செய்து எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தக்காளி விளைச்சல் அதிகரித்து, விலை வெகுவாக குறைந்தது. இதனால், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலர் அறுவடை செய்யாமல் கால்நடைகளுக்கு தீவனமாக்கினர். தற்போது தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மலைச்சந்து கிராம விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்தோம். அதன்பின்னர் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்ததால், நஷ்டம் ஏற்பட்டது.
அப்போது, 30 கிலோ தக்காளி கூடை ரூ.50-க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள், சந்தைகளில் கிலோரூ.10-க்கு விற்பனை செய்தனர். தற்போது, தக்காளி சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், விலை சற்று அதிகரித்து உள்ளது. 30 கிலோ தக்காளி கூடை ரூ.1000-க்கு கொள்முதல் செய்யப்பட்டு சந்தைகளில் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.