

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் கூட்டுறவு வங்கிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று வங்கி அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தன. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக நேற்று பதவியேற்ற ஜெய லலிதா, பயிர்க்கடன் தள்ளுபடி கோப்பில் முதல் கையெழுத்து போட்டிருக்கிறார்.
கடந்த 2006 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் நிலுவையில் இருந்த சுமார் ரூ.5,500 கோடி கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்தது. இதில், சாதாரண விவசாயிகளைவிட, லட்சக்கணக்கில் கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வைத்திருந்த அரசியல்வாதிகளும், விவசாயிகள் என்ற போர்வையில் கடன்களை வாங்கிய கூட்டுறவு அதிகாரிகளும்தான் பெருமள வில் பயனடைந்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
‘விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை மாநில அரசு எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறது?’ என்று நபார்டு தரப்பில் கேள்வி எழுப்பியபோது, ‘5 வருடங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்துவோம். அதுவரை நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு 8.5 சதவீதம் வட்டி செலுத்துவோம்’ என்று சொன்னது திமுக அரசு. அதன்படியே தவணை முறையில் கடன் பாக்கியை திருப்பிச் செலுத்திய மாநில அரசு, இறுதித் தவணை யான சுமார் 500 கோடியை அந்தந்த கூட்டுறவு வங்கிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என நழுவிக் கொண்டது.
இதையடுத்து வந்த அதிமுக ஆட்சி யிலும் கூட்டுறவுக் கடன்கள் வழங்கப் பட்டன. ரூ.3,500 கோடிக்கு கூட்டுறவுக் கடன்களை வழங்க இருப்பதாக கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் சொல் லப்பட்டது. எப்படியும் தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் கடன் வாங்கிய பலர், அதை திருப்பிச் செலுத் தாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 3 ஆயிரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு கடன்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடன் தள்ளுபடி அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்கிறார்கள் அதன் அதிகாரிகள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகளை புனரமைப்பதற் காக அமைக்கப்பட்ட வைத்தியநாதன் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக கூட்டுறவு வங்கிகளின் நிதி இழப்பை சமாளிப்பதற்காக கடந்த திமுக ஆட்சியின் இறுதியில் ரூ.1,700 கோடியை நபார்டு வங்கிக்கு மத்திய அரசு வழங்கியது. அதில் இன்னும் சுமார் ரூ.400 கோடி நமக்கு வர வேண்டி இருக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அதைப் பெறத்தவறியதால் அந்தத் தொகையை மத்திய அரசிடம் திருப்பி அளித்துவிட்டது நபார்டு வங்கி.
கூட்டுறவு வங்கிகள் நலிவில் இருந்து மீண்டு வரும் நிலையில் மீண்டும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது தமிழக அரசு. எங்களது அனுமதி இல்லா மல் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என நபார்டு வங்கி அறிவிக்க முடியும். ஆனால், அரசியல் அழுத்தங்களுக்கு பயந்து அப்படிச் சொல்வது கிடையாது.
எந்த ஆட்சி வந்தாலும் கடனை தள்ளு படி செய்துவிட்டு, மீண்டும் கடன்களை கொடுக்கச் சொல்வார்கள். திருப்பிச் செலுத்தாதவர்களின் கடனை தள்ளுபடி செய்யும் அதேநேரத்தில், ஒழுங்காக திருப்பிச் செலுத்தியவர்களுக்கு எந்தச் சலுகையும் அளிப்பதில்லை. இதனால், முறையாக கடனை செலுத்தியவர்களும் இப்போது செலுத்த மறுக்கின்றனர்.
இப்படி கடனை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களையும் விதைகளையும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக இலவசமாக வழங்கி, கட்டுப்படியான விலைக்கு அவர்களின் விளைபொருட்களை கூட்டு றவு வங்கிகளே கொள்முதல் செய்து கொண்டால் விவசாயிகளும் செழிப்பார் கள். கூட்டுறவு வங்கிகளும் பாதுகாக்கப் படும். உண்மையான விவசாயிகள் எதிர்பார்ப்பதும் இதைத்தான் என்றார்.