

நாகர்கோவிலில் காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுக் கடைகளை கொண்டு வந்து, தமிழ் சமுதாயத்தை சீரழித்தது கருணாநிதியும், ஜெய லலிதாவும்தான். திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூட முயற்சி எடுக்கப்படும் என கனிமொழி கூறுகிறார். ஆனால் கருணாநிதியோ திமுகவினர் மது ஆலைகளை நடத்தவில்லை என்கிறார். இருவரும் முரண்பட்ட கருத்துகளை பேசி வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது என்று சொல்லி மூன்று மாதத்தில் மதுக் கடைகளை திறந்து விடுவார்கள்.
அதே நேரத்தில் படிப்படியாக மதுக் கடைகளை மூடுவதாக ஜெயலலிதா சொல்வது சாத்தியப்படக் கூடியது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை யில் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. வாக்காளர்களை மயக்கி வாக்கு பெறலாம் என ஜெயலலிதா நினைக்கிறார். 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறும் அதிமுக ஆட்சியில்தான் மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஒரு கோடியே 20 லட்சம் புதிய வாக்காளர்கள் எங்களுக் குத்தான் வாக்களிப்பார்கள் என வைகோ கூறுகிறார். ஆனால் புதிய வாக்காளர்கள் விஜயகாந்தை முதல்வராக ஏற்க தயாராக இல்லை. திமுக, அதிமுக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. 130 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.