பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 496 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 496 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on

வேலூர்: வேலூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் மருத்துவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான தனது ஆண் நண்பருடன் கடந்த மார்ச் 16-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவு ஷேர் ஆட்டோவில் வேலூர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த ஆட்டோவில் பயணிகள் போல் ஏற்கெனவே அமர்ந்திருந்த கும்பல், இருவரையும் கத்தி முனையில் கடத்தி செல்போன், 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்ததுடன் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர், ஆண் மருத்துவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரம் பணத்தையும் எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு மார்ச் 22-ல் மின்னஞ்சல் வழியாக பெண் மருத்துவர் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இதில், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் இளம் சிறார் ஒருவரை தவிர மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் புகார் பெறப்பட்ட 30 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய சாட்சியான படம்

இந்த வழக்கு தொடர்பாக உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் பெண் மருத்துவரின் ஆடைகள் ரசாயன மாதிரிக்கு அனுப்பி அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதேபோல், டிஎன்ஏ பரிசோதனையும் முடிந்துள்ளது. அடையாள அணிவகுப்பில் சாட்சியாக இருந்த வேலூர் சிறை அதிகாரி, கூர்நோக்கு இல்ல அதிகாரி, 2-ம் குற்றவாளி பரத்தின் தாயார், ஏ.டி.எம் மையத்தின் வங்கி மேலாளர் உள்ளிட்ட 66 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெண் மருத்துவரின் செல்போன், 2 பவுன் சங்கிலியை பறித்த பரத், அந்த தங்கச்சங்கிலியை அணிந்துகொண்டு தனது தாயுடன் பெண் மருத்துவரின் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்டுள்ளது. செல்போனை இழந்த பெண் மருத்துவர் ஆன்லைன் வழியாக புதிய செல்போனை வாங்கி புதிய சிம் கார்டுடன் தனது மின்னஞ்சலை இணைத்தபோது, கூகுள் டிரைவில் இருந்த தரவுகள் பதிவிறக்கத்தில் பரத் எடுத்த செல்பி புகைப்படம் இருப்பதையும் பார்த்துள்ளார். அந்த படம் தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருக்கப்போகிறது. அடுத்த 60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in