

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளில் 55 ஆயிரம் பனை நாற்றுகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் (சமூக காடுகள் வளர்ப்பு திட்ட) மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனைமரங்கள் உள்ளன. பனை மூலம் பதநீர், கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, பனையோலை மூலம் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், அண்மைக் காலமாக பனை மரங்கள் விறகுக்காகவும், சாலை விரிவாக்கப் பணிகளின்போதும் அதிகளவில் அழிக்கப்பட்டது.
அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்கவும், புதிய பனை மரங்களை உற்பத்தி செய்து வளர்க்க தமிழகத்தில் முன்னோடித் திட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனத்துறை மூலம் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பனங்காடு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் (சமூக காடுகள் வளர்ப்பு திட்டம்) மகேந்திரன் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 80 ஆயிரம் பனை விதைகள் வாங்கப்பட்டு வனத்துறைக்கு சொந்தமான போலுப்பள்ளி, கூசுமலை, பையனபள்ளி, மாதேப்பட்டி, கெலமங்கலம் மற்றும் ஓசூர் ஆகிய நர்சரி பண்ணைகளில் நடப்பட்டது.
கடந்த 10 மாதங்களாக 50 வன ஊழியர்களை கொண்டு முறையாக உரங்கள் செலுத்தி தண்ணீர் விடப்பட்டு பனங்கிழங்கு வந்தவுடன் அவை தனியாக பாலிதீன் கவர்களில் பிரித்து வளர்க்கப்படுகிறது. 80 ஆயிரம் பனை விதைகளில் முறையான பராமரிப்புகள் மூலம் 55 ஆயிரம் பனை நாற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த பனை நாற்றுகள் அனைத்தும் ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பனை நாற்றுகளை உற்பத்தி செய்ய தேவையான நிதியை சிப்காட் தொழிற்பேட்டை வழங்கி உள்ளது. இதன் மூலம் தற்போது தயார் செய்யப்பட்டுள்ள பனை நாற்றுகள் நடப்பட்டு புதிய பனங்காடு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.