Published : 25 Apr 2022 06:59 AM
Last Updated : 25 Apr 2022 06:59 AM
சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் ரூ.1 கோடியே 75 லட்சத்தில் நிரந்தர வண்ண விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை மாநகரின் அடையாளமாக ரிப்பன் மாளிகை உள்ளது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் இதில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த மாளிகையில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் மாநகராட்சி சார்பில் தேசிய கொடி போன்று மூவண்ண விளக்குகள் நிறுவப்படுவது வழக்கம். மேலும் சில முக்கிய நாட்களில் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு வண்ணங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த மாளிகைக்கு நிரந்தரமாக வண்ண விளக்குகளை பொருத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகரை அழகாக்கும் திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 17 லட்சத்தில் நிரந்தர விளக்குகளை பொருத்த திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. பின்னர் டெண்டர் கோரப்பட்டு ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு திட்டம் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களில் மாறி மாறியும், அனைத்து வண்ணங்களும் கலந்தவாறும் ஒளி வீசி வருகிறது. இதனால் ரிப்பன் மாளிகை புதுப்பொலிவு பெற்றுள்ளது. பகலில் வெள்ளை மாளிகையாக மிளிரும் ரிப்பன் மாளிகையை இரவிலும் வெள்ளை மாளிகையாக மிளிரும் வகையில் விளக்குகள் ஒளிர்கின்றன.
சில நேரங்களில் செந்நிற விளக்குகள் ஒளிர்ந்து, ரிப்பன் மாளிகையை செங்கோட்டை போன்று மாற்றுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ரிப்பன் மாளிகையை வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கும் வகையில் வண்ண விளக்குகளால் மாநகராட்சி நிர்வாகம் அலங்கரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT