

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகள் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் தரன் தலைமையில் நாகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் அபிராமி வ.கனகசபை, மாநில சட்டத் துறை துணைச் செயலாளர் வேதை ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோவன், மாவட்டப் பொருளாளர் மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மின் வெட்டு அதிகரித்திருப்பதால், நிலக்கரி இறக்குமதியில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருப்பது தாமதமான நடவடிக்கையாகும். இது மட்டுமின்றி மத்திய தொகுப்பிலிருந்து நமக்கு வரவேண்டிய 800 மெகா வாட் மின்சாரம் வராததால்தான் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குவது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, மத்தியக் குழு தமிழகம் வந்து பயிர் பாதிப்புகளை பார்வையிட்டு மத்திய அரசிடம் தெரிவித்து நிவாரணம் வழங்கும் என்றார். அவர் கூறி 6 மாதங்களாகியும், ஒரு பைசா கூட நிவாரணம் வரவில்லை. அண்ணாமலை படித்தவர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. ஆனால், அவரது நடவடிக்கைகள் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.