

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கைமுத்துவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட அவரது சகோதரி என்.எம்.பிரபாவதி மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது சகோதரர், சொத்து பங்கினைக் கொடுக்காமல் ஏமாற்ற முயலுகிறார். சொந்த சகோதரிக்கான குடும்ப சொத்தையே கொடுக்காதவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்? என்பதுதான் அதற்கு அவர் தெரிவித்திருக்கும் காரணம். சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வி.மோகனிடம் நேற்று மனு தாக்கல் செய்த அவர், தன் சார்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
அதில் ‘எனது தந்தை பெயரில் உள்ள சொத்தை ஏழ்மை நிலையிலுள்ள தனக்கு கிடைக்காமல் செய்ததை விரிவாக குறிப்பிட்டு, ‘இதுகுறித்து முதல்வருக்கும், அதிமுக பிரமுகர்களிடமும் புகார் அளித்துள்ளேன். நியாயம் கிடைக்காததால், சகோதரர் சிங்கைமுத்துவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அவர் எங்கெங்கு சொத்துகள் வைத்துள்ளார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளது. பிரச்சாரத்தின் போது அவற்றை வெளியிடுவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சிங்கைமுத்து கூறும்போது, ‘நீதிமன்றம் மூலமே சொத்துகள் பிரிக்கப்பட்டன. நீதிமன்றம் மூலம் சொத்துகளை பிரித்துள்ள நிலையில், எப்படி அதில் முறைகேடு நடக்கும்?. இருப்பினும், சகோதரியின் குடும்ப சூழலைக் கருதி நானும், எனது சகோதரரும் அவருக்கு பண உதவி செய்தோம். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு, சிலரது தூண்டுதலால் அவர் இவ்வாறு செயல்படுகிறார். சொத்துகளுக்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் சரியாக உள்ளன’ என்றார்.